மட்டக்களப்பில் பலத்த மழை – தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகின்றமையால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
நேற்று  முதல் இன்று காலை வரையிலான கடந்த 24 மணித்தியாலங்களுக்குள், மட்டு. மாவட்டத்தில் அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டு. மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பத்திகாரி கே. சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் மட்டக்களப்பு நகரில் 83.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நவகிரி பகுதியில் 105.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பன்கேணி பகுதியில் 122.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மைலம்பாவெளி பகுதியில் 52.3 மில்லி  மீற்றர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சை பகுதியில்  41.0 மில்லி மீற்றர் மழை  வீழ்ச்சியும்,  வாகனேரி பகுதியில் 5.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 43.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும்,  கிரான் பகுதியில் 20.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கல்முனை பகுதியில் 97.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி கிராமத்தின் தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன்காரணமாக அப்பகுதியில் அமைந்துள்ள தோணாவை வெட்டுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் களுவாஞ்சிகுடி வட்டார உறுப்பினர் மே.வினோராஜ் தெரிவித்துள்ளார்.
நாளை தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடவுள்ள நிலையில் கடும் மழை பெய்து வருவதனால் வியாபார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, முறையான வடிகாலமைப்பு வசதியின்மை காரணமாக நுளம்பு தொற்றுக்கள் பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment