வடக்கில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நாட்டில் பல பகுதிகளில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக  வடக்கு, கிழக்கு மாகாணங்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு மாகாணத்தில் மாத்திரம் மொத்தமாக 57,589 குடும்பங்களைச் சேர்ந்த 1,93,578 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக 11,536 குடும்பங்களை சேர்ந்த 69,957 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தெரிவித்தார்.
இதன் காரணமாக தம்பிலுவில், திருக்கோவில், மகாஓயா, பொத்துவில், பதியத்தலாவ, நாவிதன்வெளி போன்ற பிரதேசங்களில் குடிநீர் தட்டுப்பாடு பாரியளவில் நிலவுவதாகவும் இங்கு 22 நீர் தாங்கிகளில் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிரதான குளங்கள், கிணறுகள் மற்றும் நீர்நிலைகள் துரிதமாக வற்றி வருகின்றன. குறிப்பாக மாவட்டத்திற்கு விவசாய நீர்ப்பாசனம் தொடக்கம் குடிநீர் வரை வழங்கி வருகின்ற அம்பாறை சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டமும் வரலாற்றில் முதல் தடவையாக வெகுவாகக் குறைந்துள்ளதாக நீர்ப்பானசத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 7 இலட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் அடி நீரைக்கொள்ளும் இச்சமுத்திரம், தற்போது 36 ஆயிரம் ஏக்கர் அடி நீரை மாத்திரமே கொண்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், வறட்சியால் விவசாயம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இம்முறை வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்பட்ட 47,300 ஹெக்டேயரில் 1,661 ஹெக்டேயர் நீரின்றி கைவிடப்பட்டுள்ளதாக மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் எவ்.எ.சமீர் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட சேனக்காடு, மொட்டயான்வெளி ஆகிய வயற்காணிகளின் 3,000 ஏக்கர் காணியில் வெறும் 500 ஏக்கர் மட்டுமே அறுவடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஊரக்கை, மொட்டையகல, பட்டிமேடு நீத்தையாறு வடகண்டம் ஆகிய பிரிவுகளிலுள்ள சுமார் 2,500 ஏக்கர் நிலம் வறட்சியால் முற்றாக கைவிடப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அங்குள்ள பிரதான சாகாமக்குளம் வரண்டு காணப்படுவதால் விவசாயத்தை கைவிடவேண்ய துர்ப்பாக்கிய நிலையில் வாழ்வதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment