டோனியின் அனுபவ ஆட்டம் இந்திய அணி கிண்ணத்தைக் கைப்பற்றியது!

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் மகேந்திரசிங் டோனியின் அனுபவ ஆட்டத்தினால் அவுஸ்திரேலிய அணியை 2-1 என வீழ்த்தி இந்திய அணி முதன்முறையாக கிண்ணத்தைக் கைப்பற்றியது. 

அவுஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. 
இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி அவுஸ்திரேலிய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 230 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அவுஸ்திரேலிய அணி சார்பாக ஹான்ஸ்கொம்ப் 58 ஓட்டங்களையும் ஷோன் மார்ஷ் 39 ஓட்டங்களையும் கவாஜா 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஷஹால் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் 231 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு டோனி தனது நிதான ஆட்டத்தாலும் அனுபவ ஆட்டத்தாலும் வெற்றியை நோக்கி வழிநடத்திச் சென்றார்.
இந்திய அணி சார்பாக துடுப்பெடுத்தாடிய ரோகித் சர்மா 9 ஓட்டங்களுடனும் ஷிகர் தவான் 23 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். இதனால் விராட் கோலி 4 ஆவது வீரராக டோனியை துடுப்பெடுத்தாடுமாறு அழைத்தார்.
விராட் கோலி - டோனி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தியா 26.3 ஓவரில் 100 ஓட்டங்களை எட்டியது. இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை 113 ஆக இருக்கும் போது அணித் தலைவர் விராட் கோலி 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதனால் இந்திய அணிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. 4 ஆவது விக்கெட்டுக்காக டோனியுடன் கேதர் ஜாதவ்  ஜோடி சேர்ந்தார். இருவரும் மிகவும் நிதானமாக விளையாடினார்கள். இந்திய அணி 38 ஓவரில் 150  ஓட்டங்களை எட்டியது. அதேவேளையில் டோனி 74 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.
இந்தியா 40 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்களை எடுத்திருந்தது. இறுதி 60 பந்தில் 66 ஓட்டங்கள் தேவைப்பட்டது இந்திய அணிக்கு, 42 ஆவது ஓவரில் 2 ஓட்டங்களும் 43 ஆவது  ஓவரில் 5 ஓட்டங்களும் 44 ஆவது ஓவரில் ஒரு ஓட்டமும் பெறப்பட்டதால் இந்திய அணிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
36 பந்தில் 52 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஸ்டாய்னிஸ் வீசிய 45 ஆவது ஓவரில் டோனி ஒரு பவுண்டரி அடிக்க இந்தியாவிற்கு 8 ஓட்டங்கள் கிடைத்தது. இதனால் போட்டியின் பரபரப்பு சற்று குறைந்தது. 46 ஆவது ஓவரில் கேதர் ஜாதவ் ஒரு பவுண்டரி அடிக்க இந்தியாவிற்கு 11 ஓட்டங்கள் கிடைத்தது.
இதனால் இறுதியில் 18 பந்தில் 27 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 48 ஆவது ஓவரை ஸ்டாய்னிஸ் வீசினார். முதல் பந்தை டோனி தூக்கியடித்தார். பந்தை மிட்ஆஃப் திசையில் நின்ற பிஞ்ச் பிடியை தவறவிட்டார். இதில் இந்தியாவிற்கு இரண்டு ஓட்டங்கள் கிடைத்தது. அடுத்த பந்தை பவுண்டரிக்கு அடித்தார். இறுதிப் பந்தை கேதர் ஜாதவ் பவுண்டரிக்கு விரட்டினார். அத்துடன் 52 பந்தில் 5 பவுண்டரியுடன் அரைசதத்தைக் கடந்தார் ஜாதவ்.
இதனால் இந்தியாவிற்கு 48 ஆவது ஓவரில் 13 ஓட்டங்கள் கிடைத்தது. இறுதி 12 பந்தில் 14 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 49 ஆவது ஓவரை சிடில் வீசினார். 2 ஆவது பந்தில் கேதர் ஜாதவ் பவுண்டரி அடித்தார். 3 ஆவது பந்தில் மூன்று ஓட்டங்களை அடித்தார். 5 ஆவது பந்தில் டோனி பவுண்டரி விளாசினார். 49 ஆவது ஓவரில் இந்தியா 13 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனால் கடைசி ஓவரில் ஒரு ஓட்டம் தேவைப்பட்டது. 2 ஆவது பந்தை கேதர் ஜாதவ் பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 49.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 234 ஓட்டங்களைப் பெற்று  7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரை 2-1 எனக்கைப்பற்றி இந்திய அணி சாதனைப்படைத்துள்ளது.
டோனி 114 பந்தில் 87 ஓட்டங்களுடனும் கேதர் ஜாதவ் 57 பந்தில் 61 ஓட்டங்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் ஷாஹல் தெரிவுசெய்யப்பட்ட அதேவேளை, தொடரின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் மகேந்திரசிங் டோனி தெரிவுசெய்யப்பட்டார்.

Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment