மருந்தடித்த பழங்களைப் பிடிக்க சிறப்புச் செயலணி

யாழ்ப்பாணம்,  நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மருந்தடித்த பழங்களைப் பிடிக்க சிறப்புச் செயலணியை  உருவாக்குவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபை மண்டபத்தில் த.தியாகமூர்த்தி தலைமையில் நேற்று இடம்பெற்றது. இந்த அமர்விலே சபை உறுப்பினர் கௌசல்யா குறித்த தீர்மான வரைவை முன்மொழிந்தார்.

பொதுமக்களுக்கு பெரும் நோய்களை ஏற்படுத்தி உயிர் ஆபத்தைக் கொண்டுவரும் மருந்து விசிறிய பழங்களை முற்றாகத் தடை செய்ய வேண்டும்  அவர் தனது தீர்மான வரைவில்,  குறிப்பிட்டார்.

சந்தைகளிலும் பழக் கடைகளிலும் மருந்து விசிறிய பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனை வாங்கி உட்கொள்பவர்கள் பல பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றனர். எனவே இதற்கென நாம் சிறப்புச் செயலணி ஒன்றை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தலைமையில் உருவாக்கி விரைவான செயற்பாட்டில் இறங்க வேண்டும் என்று சபை உறுப்பினர் இராசலிங்கம் தெரிவித்தார்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த சபை உறுப்பினர் சிவலோசன்,
 பிரச்சனை தொடர்பாக ஏற்கனவே பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும் அவர்கள் தங்களின் சட்ட நடவடிக்கையை விரிவு படுத்த வேண்டும். 

இதற்கு நாம் பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு அழுத்தங்களை வழங்கி மருந்து விசிறிய  பழங்கள் விற்பனை செய்யும் அனைவரையும் பிடிக்க வேண்டும். இது தொடர்பில் பத்திரிகைகள் ஊடாக விளம்பரப்படுத்தி வியாபாரிகளுக்கு அறிவுறுத்தலும் கொடுக்க வேண்டும்  என்றார்.

இறுதியாக நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் மருந்து விசிறிய பழங்களை விற்பனை செய்வோர்மீது நடவடிக்கை எடுக்கப் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் தலைமையில் சிறப்புச் செயலணியொன்றை உருவாக்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment