புதைகுழி விவகாரம் : புதிய அறிக்கை வேண்டும் - சீ.வி தெரிவிப்பு

மன்னார் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் தொடர்பில் வெளிவந்திருக்கும் அறிக்கை பலவிதமான சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட எலும்புக் கூடுகள் தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

மன்னார் புதைகுழி தொடர்பான முழுமையான அறிக்கைகளைப் பார்க்காமல் பதில் கூறுவது எங்களுக்குக் கடினம். இந்தியாவிலிருந்து வந்த தடயவியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் அப் பகுதிக்குச் சென்று  மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளைப் பார்த்து அவை கடந்த 50 வருடங்களிலே நடைபெற்ற இறப்புக்களாகத்தான் இருக்க வேண்டுமென்று கூறியிருக்கின்றார்.

அவர் கூறிய 50 ஆண்டுகளுக்கும் ஆய்வின் பின்னர் வந்திருக்கும் காபன் அறிக்கையின் 500 ஆண்டுகளுக்கும் இடையில் பலவிதமான வித்தியாசங்கள் இருக்கின்றன.

இங்கு 50 வருடங்கள் என்று ஒரு விடயத்தைப் பரிசீலித்துக் கொண்டிருக்கும்போது அமெரிக்காவுக்கு 500 வருடங்களுக்கு முன்னையதை அனுப்பினால் அவர்கள் 500 வருடங்களாக இருக்கத்தக்கதாகத் தான் அறிக்கையைத் தருவார்கள் என்பது ஒன்று. நாங்கள் ஒரு முக்கியமான விடயத்தைப் பார்க்க வேண்டும்.

எங்களுடைய அரசியல்வாதிகளில் ஒருவர் இவற்றை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கு முன்னரே இது தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையிலான சில விடயங்கள் அமெரிக்காவில் மேற்கொள்ளப்படும் இந்தப் பரிசோதனைகளில் இருந்து தெரியப்படுத்தப் போகின்றது என்று கூறியிருந்தார்.

அவருக்கு எப்படி இதைப் பற்றித் தெரியும். அதாவது எலும்புகள் அமெரிக்கா போக முன்னரே இதைப்பற்றிச் சொல்லியிருக்கின்றார். அவர் அப்படிச் சொல்வதற்கு என்ன காரணம் என்பதை நாங்கள் அறிய வேண்டும். 

ஏனென்றால் இவ்வாறான ஒரு சதி அல்லது பிழையான நடவடிக்கை நடந்திருந்தால் அவ்வாறு நடக்கப் போகின்றதென ஏற்கனவே உணர்ந்து அல்லது அறிந்து கொண்டு தான் அவ்வாறானதொரு பேச்சைப் பேசியிருக்க வேண்டும்.

அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டவையை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும் –என்றார்.Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment