கோத்தா மீது அதிகரிக்கும் வழக்குப் பதிவுகள்!



முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கினைப்போல் பிரித்தானியாவிலும் வழக்குகளை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் பணிப்பாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
ITJP யினால் இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சித்திரவதைகளை அனுபவித்த நூற்றுக்கு அதிகமானோர் பிரித்தானியாவிலும் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். அந்தவகையில் சித்திரவதைகள் தொடர்பில் பிரித்தானியாவிலும் வழக்குகளை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என லண்டனில் இடம்பெற்ற ஊடக மாநாட்டினைத் தொடர்ந்து இடம்பெற்ற நேர்காணலில் யஸ்மின் சூக்காவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளிக்கும்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“நிச்சயமாக அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஏனெனில் சித்திரவதைகள் என்பது சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட குற்றச் செயலாகவே கருதப்படுகின்றது. பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் இவ்வாறு வழக்கு தொடர்வதில் உள்ள வித்தியாசம் என்னவெனில் அமெரிக்காவானது சித்திரவதைக்கு உள்ளானவர்களை பாதுகாப்பதற்கு என தனியான சட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்தியுள்ளது.
அந்த சட்டத்தின்படி வழக்கு தொடர்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் அந்த நாட்டில் அல்லாது வேறு எந்த நாட்டில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் அந்த சட்டத்தின் கீழ் வழக்கினை தொடர முடியும். ஆயினும் சித்திரவதையை செய்தவர் மீது அழைப்பாணையை வழங்க முடியுமான பட்சத்தில் மாத்திரமே வழக்கை தொடர முடியும்.
பிரித்தானியாவிலும் இவ்வாறான பல வெற்றிகரமான வழக்குகள் நடைபெற்றுள்ளன. உதாரணமாக நேபாளத்தைச் சேர்ந்த கேணல் தரநிலை இராணுவ வீரர் குணால் லாமா என்பவருக்கு எதிராக பிரித்தானியாவில் வழக்கு தொடரப்பட்டு அவர் பிரித்தானியாவிற்கு விஜயம் செய்தபோது கைதுசெய்யப்பட்டார்.
இறுதியில் யுத்தக் குற்றங்கள் குறித்து அவர் தப்பித்துக்கொண்டாலும் அவரது வழக்கின்போது ஏராளமான கேள்விகளை வழக்கறிஞர்கள் முன்வைத்தார்கள்.
மேலும் சித்திரவதைகள் தொடர்பாக அதனை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயம் எல்லா நாடுகளுக்கும் உள்ளது. அதேபோல் சித்திரவதைகளுக்கு பொறுப்பானவர்களை தண்டிக்கும் கடப்பாடும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈட்டினை பெற்றுக்கொடுக்கும் கடமையும் அந்த நாடுகளுக்கு உள்ளது. ஆயினும் இவ்வாறான வழக்குகளில் அரசியல் தலையீடுகள் இருப்பதனை தவிர்க்க முடியாது.
இந்நிலையில் கோட்டாபயவினால் அல்லது அவரது காலத்தில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்களும் இவ்வாறு வழக்குகளை தொடர முன்வரலாம்” என அவர் தெரிவித்தார்.
Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment