2019ஆம் ஆண்டு இன அழிப்புக்கு எதிரான ஆண்டாக பிரகடனம்!

தமிழின அழிப்பு நாளான முள்ளிவாய்க்கால் பெருந்துயர நினைவு நாள் இன்று (சனிக்கிழமை) நினைவுகூரப்படுகின்றது.
இந்நிலையில், இதன் பிரதான நினைவு கூரல் இறுதிப் போரின் இனவழிப்பு அடையாளமாகவுள்ள முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெற்றது.
இதனிடையே, 2019 ஆம் ஆண்டு இன அழிப்புக்கு எதிரான ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவேந்தல் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“தமிழர்களுக்கு எதிராக சிங்கள-பௌத்த ஸ்ரீலங்கா பேரினவாத அரசு வரலாற்றில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து, கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை கட்டம் கட்டமாக அரங்கேற்றி வந்துள்ளது. இவ் இனப்படுகொலை முள்ளிவாய்க்காலில் அதி உச்சத்தை அடைந்து இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட எமது இரத்த உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றோம். கொல்லப்பட்ட எமது உறவுகளின் கனவுகளை நினைக்கின்றோம். முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தின் ஒரு தசாப்தத்தை நினைவுகூரும் ஒட்டுமொத்த தமிழினம் அவலங்களை மட்டும் நினைவு கூரவில்லை.
சிங்கள–பௌத்த சிறிலங்கா பேரினவாத அரசின் அடக்குமுறைக்கெதிராக தமிழினம் வெகுண்டெழுந்த வரலாற்றையும் அவற்றின் வெவ்வேறு வடிவங்களையும், கூட்டு உரிமைக்கான தியாகத்தையும் நினைவு கூருவது எம் ஒவ்வொருவரதும் வரலாற்றுக் கடமை.
தமிழர் உரிமைக்கான போராட்டத்தை சிறிலங்கா அரசு பயங்கரவாத முத்திரைகுத்தி அதன் நியாயத்தன்மையை கேள்விக்குட்படுத்தி வந்துள்ளது. சர்வதேச மயப்படுத்தப்பட்ட பயங்கரவாத பிரச்சாரத்தினூடு ஆயுதப் போராட்டவடிவம் மௌனிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் ஆயுத மௌனிப்பின் பின் தமிழர் போராட்ட வடிவங்கள் வெவ்வேறு வழிகளில் முன்னெடுக்கப்பட்டன. பின் முள்ளிவாய்க்கால் தசாப்தத்தில் வரலாற்றில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி வேண்டிய கோரிக்கை வலுப்பெற்றது.
தமிழினத்தின் மீதுநடந்தேறும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை ஐ.நாவும் சர்வதேச சமூகமும் வெறுமனே அவதானித்துக் கொண்டிருப்பது கவலைக்குரியதானது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஒருதசாப்தம் நிறைவடைந்தும் நினைவு கூருவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது. நினைவு கூருவது பாதிக்கப்பட்டமக்களின் உரிமை. நினைவு கூருவதற்கான உரிமை மறுக்கப்படுவது உண்மையை மறுப்பதும் மறைப்பதுமாகும். சிறிலங்கா அரசு மறுப்புவாதத்தை நிறுவனமயப்படுத்தி உண்மைகளை வரலாற்றில் மறுத்து வந்துள்ளது. சாட்சியங்களை பொய்யர்களாக்கி அவர்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின், கையளிக்கப்பட்டவர்களின் விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தொடர்ந்தும் வெற்றி வீரர்களாக உலா வருகின்றனர்.
எனவே, பின் முள்ளிவாய்க்கால் வரலாற்றுத் தசாப்தத்தில் ஒன்றுகூடியுள்ள தமிழ் மக்களாகிய நாங்கள் நினைவு கூரலை அணி திரட்டலாக மாற்றவேண்டிய வரலாற்றுக் கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளோம். அந்திய மீட்பர்களைவிடுத்து மக்கள் சக்தியில் நம்பிக்கை வைத்து, நினைவு கூரலை சமூக இயக்கமாக மாற்றி சபதம் செய்வோம். எங்கள் உறவுகளின் கல்லறைகளின் மீதுசத்தியம் செய்வோம்.
-முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலைக்கு சர்வதேச நீதிவேண்டி இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துதல்.
-தமிழர்கள் ஒருதேச அங்கீகாரத்திற்குரியவர்கள் என்பதையும் தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும் ஒருபோதும் பாரதீனப்படுத்தப்பட முடியாத சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்பதையும் தமிழர்கள் சார்பில் கோருதல்.
-தமிழர் இன அடையாள இருப்பின்மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ள இனப்படுகொலையைத் தடுக்க தமிழர் சமூக அமைப்புக்களை பலப்படுத்தி விடுதலைக்காக முனைப்புடன் உழைக்க மக்கள் பலத்தை நம்பி நினைவு கூரலை போராட்ட வடிவமாக, சமூக இயக்கமாக மாற்றவேண்டிய சூழலுக்குள் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது. அடக்கு முறைக்குள் வாழும் சமூகத்திற்கு நினைவுகூரல் ஒரு போராட்ட வடிவமே. தமிழ் தேசிய நினைவுத்தினம் அடக்குமுறைக்கெதிரான ஊடகம் என்பதை நினைவிற் கொண்டு உறுதி பூணுவோம். தமிழர் உரிமையை வென்றெடுப்பதற்கான பயணிப்பில் இணைவோம்.
மே 18 இன்றைய நாளை இன அழிப்புக்கு எதிரான தமிழ்தேச எழிச்சி நாளாகவும் 2019ஆம் ஆண்டை இன அழிப்புக்கு எதிரானதும் அரசியல் நீதிக்கான சர்வதேச வலுச்சேர்க்கும் ஆண்டாகவும் பிரகடனம் செய்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment