பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பி வைக்க தயங்கும் பெற்றோர்-சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா

வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பி வைக்க பெற்றோர்கள் தயங்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களை இராணுவத்தினர் சோதனையிடுவதுடன் பாதுகாப்பு வழங்கி வருவது குறித்து நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவில் உயிர்த்தஞாயிறன்று இடம்பெற்ற குண்டுதாக்குதல்களை அடுத்து, நாடளாவிய ரீதியில் மூடப்பட்ட பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய தரம் 6 ஆம் ஆண்டு முதல் உயர்தர மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் ஆரம்ப பாடசாலைகளுக்கான கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதனையடுத்து யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணம் முழுவதும் பாடசாலைகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, பொலிஸார் இராணுவத்தினர் இணைந்து பாடசாலைக்கு வருகைதந்த பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுடைய பைகள் பரிசோதனை செய்த பின்னர் பாடசாலை வளாகத்திற்குள் அனுமதிக்கின்றனர்.
இந்த நிலையிலேயே பழைய மாணவர்கள், சாரணர்கள் பெற்றோர்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு நிலைய அதிகாரிகளின் உதவியுடன் மாணவர்களின் பைகளை சோதனையிடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன் சாதாரண பொது மக்கள் வீதிகளில் எங்கெல்லாம் சோதனை இடப்படுகின்றார்களோ அங்கெல்லாம் மக்கள் பிரதிநிதிகளை சோதனையிடுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீண்டும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளமையினால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா விசனம் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு பின்னாலுள்ள சூத்திரதாரிகளை அரசாங்கம் விரைவில் கைது செய்து நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment