ரிஷாத்துக்கான செல்வாக்கைப் பெருக்காதீர், சீறிய மஹிந்த!!

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை நேற்று நேரில் சந்தித்த பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரினால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறு கோரியுள்ளனர்.
அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களும் மஹிந்தவைத் தனியாகச் சந்தித்து பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுள்ளனர்.
எனினும், இரு சந்திப்புகளிலும் சாதகமான பதிலை மஹிந்த வழங்கவில்லை.
"அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சில தவறுகள் உள்ளன. அதனை அவசரப்பட்டு இப்போது ஏன் சமர்ப்பிக்க வேண்டும்? அதில் உள்ள தவறுகள் பிரேரணை தோற்பதற்கே வழிவகுக்கும். தோற்கும் பிரேரணையைக் கொண்டுவந்து ரிஷாத்துக்கான செல்வாக்கைப் பெருக்காதீர்கள். எனவே, முதலில் பிரேரணையில் உள்ள தவறுகளைத் திருத்துங்கள். அதன்பின்னர் அதனை ஆதரிப்பதா? இல்லையா? என்று நான் முடிவெடுப்பேன்" - என்று மேற்படி சந்திப்புகளில் சீறிப் பாய்ந்துள்ளார் மஹிந்த.
குறித்த பிரேரணைக்கு பஸில் ராஜபக்ச தலைமையிலான அணியினரும் இன்னும் ஆதரவு வழங்கவில்லை.
"வெறுமனே பிரேரணைகளை மட்டும் கொண்டுவந்து பயனில்லை. அது நிறைவேற்றப்படவேண்டும். ஆனால், பொது எதிரணியிடம் அதற்கான பெரும்பான்மை இல்லை. ஜே.வி.பியின் ஆதரவுகூட அவசியம்'' என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
இதேவேளை, அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இன்றுவரை 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர் எனவும், நாளைய தினமும் கையொப்பங்கள் திரட்டப்படும் எனவும், அதன்பின்னர் சபாநாயகரிடம் பிரேரணை கையளிக்கப்படும் எனவும் பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment