செம்மலை பிள்ளையார் ஆலயத்துக்குச் சென்ற பக்தர்களுக்கு மீண்டும் மிரட்டல்!

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காகவும் அபிவிருத்தி வேலைகளைச் செய்வதற்காகவும் சென்ற செம்மலை கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளதுடன் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரினாலும், அடாத்தாக விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவினாலும் இன்று  இவ்வாறு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இன்று நீராவியடி பிள்ளையார் ஆலயத்தைச் சேர்ந்த நிர்வாகத்தினரும் அடியவர்களும் உரிய அனுமதியுடன் நீதிமன்றின் தீர்ப்புக்கு உட்பட்டு பிள்ளையார் ஆலயத்தின் இருமருங்கிலும் “நீராவியடி பிள்ளையார் ஆலயம்” எனும் பெயர்ப் பலகையை நாட்ட சென்றனர். இவ்வேளையில் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தரால் இவர்கள் தடுக்கப்பட்டனர் .
மேலும் உடனடியாக பௌத்த பிக்குவால் பொலிஸாருக்கும், விசேட அதிரடிப் படையினருக்கும் முறைப்பாடு வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வருகைதந்த பொலிஸார் பௌத்த பிக்குவுக்குச் சார்பாகச் செயற்பட்டதாக மககள் தெரிவித்துள்ளனர். அத்துடன், செம்மலை கிராம மக்களை நிலத்தில் அமர்த்தி அனைவரினது பெயர், அடையாள அட்டை இலக்கம் என்பனவற்றை பதிந்ததோடு மிக நீண்டநேரம் விசாரணைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர்.
இதனிடையே, செய்தி சேகரிப்புக்காகச் சென்ற ஊடகவியலாளரைப் புகைப்படம் எடுக்கவேண்டாம் எனவும் ஊடகவியலாளர் என அடையாளபடுத்திய பின்பும் பொலிஸார் வேண்டும் என்றே ஊடகவியலாளரின் அடையாள அட்டையை வாங்கி பதிவுகளை மேற்கொண்டதோடு புகைப்படம் எடுத்தும் அச்சுறுத்தல் விடுத்திருந்தனர் .
நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்பட்டு 20 நாட்களை எட்டியுள்ள நிலையில் பொலிஸார் நீதிமன்றின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாது பௌத்த பிக்குவுக்கு சார்பாகச் செயற்பட்டு வருகின்றனர் என செம்மலை கிராம மக்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment