மின்னல் தாக்கி எரிந்ததா ரஷ்ய விமானம்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அவசரமாகத் தரையிறங்கிய விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில்,   விமானத்திலிருந்த 78 பேரில் 41 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்த விமானம் மின்னல் தாக்கியதையடுத்தே அவசரமாகத் தரையிறங்க முயன்று விபத்தில் சிக்கியதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் தப்பியவர்கள் தாங்கள் தப்பியது எப்படி என்பதைப் பற்றிக் கூறும்போது மின்னல் தாக்கியதால் விமானம் விபத்துக்குள்ளானதாகத் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணத்தை ஆராயும் அதிகாரிகள் இன்னமும் மின்னல் தாக்கி விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுவது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

மின்னல் தாக்குதல்களைத் தாங்கும் வகையிலேயே நவீன விமானங்கள் உருவாக்கப்படுகின்றன. மாஸ்கோவின் ஷெரமெட்யேவோ விமான நிலையத்திலிருந்து வடக்கு ரஷ்ய நகரமான முர்மான்ஸ்க் நோக்கிப் புறப்பட்ட இந்த விமானம் சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் காரணங்களால் உடனடியாக விமான நிலையத்துக்குத் திரும்பி தரையிறங்கியதாக அந்த விமானத்தை இயக்கிய அரசு விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏரோபிளாட் அறிவித்தது.

விபத்துக்குள்ளான விமானம் சுகோய் சூப்பர்ஜெட்-100 வகையை சேர்ந்தது.

விமானத் தரவுகளையும், விமானி அறையான காக்பிட்டில் நடக்கும் உரையாடல்களையும் பதிவு செய்யும் கறுப்புப் பெட்டி மீட்டெடுக்கப்பட்டு விசாரணையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விமானம் பறக்க ஆரம்பித்த உடனே மின்னல் தாக்கியதாக உயிர் தப்பிய பயணியான பையோடர் யெகோரோவ் என்பவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

பல இலட்சக்கணக்கான வணிக விமானங்கள் ஒவ்வோர் ஆண்டும் வானத்தில் பறக்கின்றன. இப்படி நடக்கும் விமானப் பயணங்களின்போது மின்னல் வருவது சகஜமானதாகும்.

பாரம்பரியமான விமானங்கள் அலுமினியம் கொண்டு கட்டப்படுகின்றன. இவை வழக்கமாக மின்னல் தாக்குதல்களைத் தாங்கி நிற்பவை. 

விமானத்தின் வெளிக்கூடு மின்னல் தாக்கும்போது பாயும் மின்சாரத்தை எல்லா இடத்துக்கும் பரப்பி, அதன் மூலம் விமானத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் பாதுகாக்கக்கூடியவை. இதனால், பயணத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.

ஆனால், புதிய விமானங்கள் சில கார்பன் இழை போன்ற லேசான பொருள்களைக் கொண்டு கட்டப்படுகின்றன. இந்தப் பொருள்கள் அவ்வளவாக மின்சாரத்தைக் கடத்தாதவை. ஒயர் வலை அல்லது இழை கொண்டு இத்தகைய விமானங்களின் மேற்கூட்டைப் பாதுகாக்கவேண்டும்.

இது தவிர, விமானத்தின் எரிபொருள் டாங்கியின் மின்னணு அமைப்புகள் மற்றும், இணைப்புகள் வெளியிலிருந்து மின் தாக்குதலுக்கு உள்ளாகாத வகையில் உறுதியான முறையில் வலுவாகப் பாதுகாக்கப்பட்டிருக்கும்.

சில நேரங்களில் மின்னல் தாக்குவதால் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை திசை திருப்ப அல்லது அவசரமாகத் தரையிறக்க வேண்டிய தேவை ஏற்படலாம்.  இதனால், விமானம் கீழே மோதி விபத்துக்குள்ளாவது மிக அரிது.

எப்படியானாலும், விமானத்தை மின்னல் தாக்கும்போது விமானத்துக்குள் இருப்பவர்களால் இதைப் பார்க்க முடியும். பெருத்த இடியோசையை அவர்கள் கேட்கமுடியும். அல்லது விமானத்தின் உள்புறம் திடீரென கண்ணைக் கூசவைக்கும் ஒளியால் நிரம்பும்.

இதற்கு முன்பு சுகோய் சூப்பர்ஜெட்-100 ரக விமானம் விபத்தில் சிக்கியது 2012 இல் இந்தோனீசியாவில்தான். அப்போது விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்தனர். 

மனிதத் தவறினால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக அப்போது கூறப்பட்டது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment