ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய குண்டு தயாரிக்கும் நிபுணர்கள் அந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டுவிட்டனர் என பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் முப்படைகளின் தளபதிகளுடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தாக்குதல்களில் ஈடுபட்ட குழுவில் இரண்டு குண்டு தயாரிக்கும் நிபுணர்களே இருந்தாகவும் அவர்கள் இரண்டு பேரும் தற்போது இறந்துவிட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கால தாக்குதல்களுக்காக அவர்கள் வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்ததாகவும் அவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல்களில் நேரடியாக ஈடுபட்ட அனைத்து சந்தேகநபர்களும் கொல்லப்பட்டுள்ளதோடு ஏனையவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முப்படைகளுடன் இணைந்து பொலிஸார் பொதுமக்களைப் பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பாடசாலைகளில் கூட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதோடு, மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு மற்றும் பரப்புரைகளை முன்னெடுப்பதால் பாடசாலைகள் தாக்கப்படும் என அர்த்தமில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இது ஒரு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாத்திரமே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment