ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் மீது ராணுவம் அதிரடி தாக்குதல்

அமெரிக்காவில் 2001–ம் ஆண்டு வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் மற்றும் நியூயார்க் உலக வர்த்தக மையம் ஆகியவற்றின் மீது அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி அதிபயங்கர தாக்குதல்களை நடத்தினர். 3 ஆயிரம் அப்பாவி மக்கள் இந்த தாக்குதலில் பலியானது உலக வரலாற்றில் கரும்புள்ளியாக பதிவாகி உள்ளது.
இந்த தாக்குதல்களை நடத்திய அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுத்ததால், அந்த நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அங்கு ஆட்சி நடத்தி வந்த தலீபான்களை அப்புறப்படுத்தியது. மக்களாட்சியை கொண்டுவந்தது. ஆனாலும் 18 ஆண்டுகளாக போராடியும் தலீபான் பயங்கரவாதிகளை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. இன்னும் அங்கு தலீபான்கள் பதுங்கி இருந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த உள்நாட்டுப்போரை பயன்படுத்தி அங்கு ஆங்காங்கே ஐ.எஸ். பயங்கரவாதிகளும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
இந்த நிலையில் தலீபான், ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கையை ராணுவம் முடுக்கிவிட்டுள்ளது. அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
காந்தஹார் மாகாணத்தில் ஷாவாலி கோட் மாவட்டத்தின் கரீ பகுதியில் பதுங்கி இருந்த தலீபான் பயங்கரவாதிகளை குறிவைத்து ராணுவம் நேற்று முன்தினம் அதிரடி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 9 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
பயங்கரவாதிகளின் வாகனங்கள் அழிக்கப்பட்டன.
இந்த தாக்குதலை தொடர்ந்து காந்தஹாரில் தலீபான்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
குண்டூஸ் மாகாணத்தின் கான் அபாத் மற்றும் அதையொட்டிய அக்டாஷ் மாவட்டங்களில் பதுங்கி இருந்த தலீபான் பயங்கரவாதிகளை இலக்காகக் கொண்டு ராணுவம் நேற்று அதிரடி தாக்குதல்களை நடத்தியது. இதில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
12–க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலில் ராணுவ தரப்பில் எந்தவொரு சேதமும் இல்லை என தகவல்கள் கூறுகின்றன.
நங்கர்ஹார் மாகாணத்தின் சபார்ஹர் மாவட்டத்தில் மலைப்பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு ராணுவம் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியது.
இதில் 4 பயங்கரவாதிகள் பலியாகினர். மற்றவர்கள் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் ஓட்டம் எடுத்து விட்டனர்.
ஆப்கானிஸ்தானில் ஒரே நேரத்தில் தலீபான் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம் அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment