ஐக்கிய அரபு அமீரகத்தில் சவுதி அரேபிய சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓமன் வளைகுடா பகுதியில் புஜைரா துறைமுகம் அமைந்துள்ளது. அந்நாட்டின் மிகப்பெரிய துறைமுகமான இங்கு, பல்வேறு நாடுகளை சேர்ந்த சரக்கு கப்பல்கள் வந்து செல்கின்றன. இந்த துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 4 வெளிநாட்டு கப்பல்கள் மீது நேற்று முன்தினம் காலையில் நாசவேலை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்தது. ஆனால் தாக்குதல் நடத்தப்பட்ட விதம், தாக்குதலுக்குள்ளான கப்பல்கள் எந்த நாடுகளை சேர்ந்தவை போன்ற கூடுதல் தகவல்களை வெளியிடவில்லை. அதே சமயம் இந்த தாக்குதலில் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், புஜைரா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த தங்கள் நாட்டின் 2 சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் கப்பல்கள் சேதம் அடைந்ததாகவும் சவுதி அரேபியா நேற்று தெரிவித்தது.


இதுகுறித்து அந்நாட்டின் எரிசக்தித்துறை மந்திரி காலித் அல் பாலிக் கூறுகையில், “ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரத்யேக பொருளாதார மண்டலமான புஜைரா துறைமுகத்தில் சவுதி அரேபியாவின் 2 எண்ணெய் கப்பல்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெயை அமெரிக்காவுக்கு எடுத்து செல்லும் வழியில் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது” என்றார்.

ஈரானை எச்சரிக்கும் விதமாக அமெரிக்கா போர் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தளவாடங்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பி இருக்கும் சூழலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துறைமுகத்தில் சவுதி அரேபியா உள்பட அயல்நாடுகளின் சரக்கு கப்பல்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment