அரையிறுதிக்கு நுழையும் அடிப்படை பண்பு இலங்கை அணியிடம் இருக்கவில்லை: மஹேல

நடப்பு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், அரையிறுதிக்கு நுழையும் அளவுக்கு அடிப்படையான பண்புகள் இலங்கை கிரிக்கெட் அணியிடம் இருக்கவில்லை என அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், இலங்கை கிரிக்கெட் அணி விளையாடிய விதம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், “மத்திய வரிசையில் போதுமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதோடு லசித் மாலிங்கவை தவிர்த்து துடுப்பாட்ட வரிசைகளை அச்சுறுத்தும் அளவுக்கு பந்துவீச்சும் இருக்கவில்லை.
உலகக் கிண்ண அணி பற்றி எதிர்பார்ப்புகள் இருந்தன. இலங்கை போதுமான துடுப்பாட்டத்திறனை வெளிப்படுத்தாத போதும் பெரிய தொடர்களில் அவர்கள் எப்போதும் சிறப்பாக செயற்படுகின்றனர். மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான அவர்களின் வெற்றி அவர்களுக்கு அதிக நம்பிக்கையை கொடுத்தது. அந்த வெற்றிகளுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும். மழையால் கைவிடப்பட்ட போட்டிகளால் வாய்ப்புகள் நழுவிப்போயின. இல்லாவிட்டால் இந்தியாவுக்கு எதிரான இறுதிக் குழுநிலைப் போட்டி ஒரு தீர்க்கமான போட்டியாக இருந்திருக்கக் கூடும். நிலைமை மாறிவிட்டது.
அஞ்சலோ மெத்தியூஸ் தொடரின் ஆரம்பத்தில் துடுப்பாட்டத் திறனுடன் இருக்கவில்லை. ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான இன்னிங்ஸ் அவருக்கு தீர்க்கமானதாக இருந்ததோடு அது அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. இலங்கை கிரிக்கெட்டுகாக அவருக்கு அதிகம் பங்களிப்புச் செய்ய முடியும் என்பதோடு எதிர்கால திட்டத்தில் அவர் கட்டாயம் இருக்க வேண்டும்.
இந்தியாவுக்கு எதிராக இலங்கை சரியாக விளையாடவில்லை என்றபோதும் அவர்களின் பந்துவிச்சு ஒரே மாதிரியாக இருந்தது என்ற விமர்சனத்தை மாத்திரமே என்னால் முன்வைக்க முடியும். பந்துவீச்சுத் துறை அதிகம் கவலை அளிப்பதாக உள்ளது. மாலிங்க தனது கிரிக்கெட் வாழ்வை முடித்துக் கொள்ளும் தருணத்தை எட்டியிருக்கும் நேரத்தில் எந்த ஒரு நிலையிலும் தாக்கம் செலுத்தக்கூடிய நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நான்கு அல்லது ஐந்து பந்துவீச்சாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
அனுபவம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ போன்ற இளம் வீரர்கள் மூலம் வலுவான துடுப்பட்ட வரிசை ஒன்றை கட்டியெழுப்ப முடியும். இவர்களில் பெரும்பாலானவர்கள் 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக் கிண்ண தொடர் வரை விளையாட தகுதி பெற்றவர்களாக உள்ளனர்.
எனினும், விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய பந்துவீச்சாளர்கள் தேவைப்படுகின்றனர். எனவே, ஒருநாள் பந்துவீச்சில் தமது திட்டம் என்ன என்பதை கண்டறிய வேண்டும். அணித்தலைவராக திமுத் கருணாரத்ன மிகச் சிறந்த பணியை ஆற்றியதாக அனைவரும் உணர்கின்றனர். அது அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தபோதும் நிலைமையை கட்டுப்படுத்தி செயற்பட்டார். சதகமான முடிவுக்காக தம்மாலான அனைத்து முயற்சிகளையும் அவர் செய்தார்.
துடுப்பாட்டத்திலும் உலகக் கிண்ண தொடரை சிறந்த முறையில் அவர் ஆரம்பித்ததும் அவரது செயற்பாட்டுக்கு உதவியது. உலகக் கிண்ண தொடரில் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை சிறந்த முறையில் ஆற்றிய திமுத் தலைமைப் பொறுப்பில் தொடர்வதை பார்க்க இலங்கை விரும்பும் என்று நான் நம்புகிறேன்” என கூறினார்.
நடப்பு உலகக்கிண்ண தொடரில் 8 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்த இலங்கை அணி, குழுநிலைப் போட்டிகளுடன் வெளியேறியது.
பெரும்பாலும் அனுபமில்லாத வீரர்களை கொண்ட அணியாக உலகக்கிண்ண தொடருக்குள் நுழைந்த இலங்கை அணி, 9 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றிபெற்று 4 போட்டிகளில் தோல்வியடைந்தது. இரண்டு போட்டிகள் மழைக் காரணமாக கைவிடப்பட்டது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment