தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி தனது கடைசி லீக் போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி, ஆறுதல் வெற்றியுடன் உலக்கோப்பையை விட்டு வெளியேறியது.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி மான்செஸ்டரில் நேற்று நடந்தது. அரையிறுதி வாய்ப்பை இழந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு இது கடைசி லீக் போட்டியாகும்.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய மார்க்ரம், டி காக் இருவரும் அபார ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். மார்க்ரம் 34 ஓட்டங்களிலும், டி காக் 52 ஓட்டங்களிலும் லயன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் கைகோர்த்த டூ பிளிசிஸ் மற்றும் வான் டர் டுசன் இருவரும் அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். இவர்களின் அதிரடியால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. கேப்டன் டூ பிளிசிஸ் தனது 12வது ஒருநாள் சதத்தை விளாசிய நிலையில், பெஹெண்ட்ராஃப் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
அவர் 94 பந்துகளில் 2 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் சதத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த வான் டர் டுசன் 95 ஓட்டங்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவுட் ஆகி சதத்தை தவற விட்டார்.
இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 325 ஓட்டங்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து, களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் ஆரோன் பிஞ்ச், ஸ்மித் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
எனினும் டேவிட் வார்னர் நங்கூரம் போல் நின்று விளையாடினார். ஸ்டோய்னிஸ் 22 ஓட்டங்களிலும், மேக்ஸ்வெல் 12 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இந்நிலையில், அலெக்ஸ் கேரி தொடக்க வீரர் வார்னருடன் இணைந்து மிரட்டினார்.
இதற்கிடையில் சதம் அடித்த வார்னர், 117 பந்துகளில் 2 சிக்சர், 15 பவுண்டரிகளுடன் 122 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். எனினும் தொடர்ந்து அதிரடி காட்டிய அலெக்ஸ் கேரி அரைசதம் விளாசினார்.
அணியின் ஸ்கோர் 275 ஆக இருந்தபோது, அலெக்ஸ் கேரி 85 (69) ஓட்டங்களில் மோரிஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து கவாஜா (18), ஸ்டார்க் (16) இருவரும் ஆட்டமிழந்தனர்.
முடிவில் அவுஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 315 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளும், பெலுக்வாயோ, பிரிட்டோரியஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
தென் ஆப்பிரிக்காவுக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது. அதே சமயம் அரையிறுதியில் விளையாட உள்ள அவுஸ்திரேலியாவுக்கு இது 2வது தோல்வியாகும்.
0 comments:
Post a Comment