சோமாலியாவின் தெற்கு பகுதியில் உள்ள கிஸ்மாயோ நகரில் உள்ள பிரபல ஓட்டலுக்கு நேற்று ஒரு வாகனம் வந்தது. ஓட்டலின் பிரதான கட்டிடத்தை நெருங்கிய அந்த வாகனம், திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் பலர் தூக்கி வீசப்பட்டனர். அந்த இடம் முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது.
வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தை ஓட்டி வந்த தற்கொலை பயங்கரவாதி அதனை வெடிக்கச் செய்துள்ளான். இதனால் ஓட்டல் வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது. வாடிக்கையாளர்கள் அங்குமிங்கும் சிதறி ஓடினர். இந்த பதற்றத்தைப் பயன்படுத்திய பயங்கரவாதிகள் சிலர், துப்பாக்கிகளுடன் ஓட்டலுக்குள் நுழைந்து வாடிக்கையாளர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து ஏராளமான பாதுகாப்பு படையினர் அந்த ஓட்டலை சுற்றி வளைத்து பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்குமிடையே நீண்டநேரம் நீடித்த இந்த சண்டையில், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் தரப்பில் 26 பேர் உயிரிழந்தனர். 56 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.இந்த தாக்குதலுக்கு அல்கொய்தாவுடன் தொடர்புடைய அல்-ஷபாப் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. சோமாலியா அரசாங்கத்தை கவிழ்க்க அல்-ஷபாப் இயக்கம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுத தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. ஏராளமான கிராமங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, அதிகாரிகள் மீது கொரில்லா தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment