பகையைத் தூண்டும் சிங்களவரின் உரைகளுக்கு தண்டனை ஏதுமில்லை

“இலங்கையில் பெரும்பான்மைச் சமூகத்தினரால் பகைமையைத் தூண்டும் உரைகளுக்குத் தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. 2007ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின் கீழ் பகைமை உணர்ச்சியைத் தூண்டும் உரைகளைத் தடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் இருப்பினும், பாரபட்சமற்ற முறையில் அவை வலியுறுத்தும் வகையில் அமையவில்லை.”

– இவ்வாறு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நாவின் விசேட அறிக்கையாளர், கிளெமென்ட் நைலட்சோஸி வூல் தெரிவித்தார்.

தனது இலங்கைப் பயணத்தின் முடிவில் நேற்றுக் கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனநாயகத்தின் பின்னடைவு தொடர்பில் அனைத்துத் தரப்பினராலும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. அது என்னைக் கவலையடையச் செய்துள்ளது. சுதந்திரத்துக்கான மக்களின் வேணவாக்களையும், சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாயகத்தையும் நாட்டின் அரசியல் தலைவர்கள் நிராகரிக்கக் கூடாது. போராடிப் பெற்ற ஜனநாயக உரிமைகள் தொடர்பான முன்னேற்றத்தைக் குறைத்து மதிப்பிடுதல் போன்ற விடயங்களை எதிர்வரும் தேர்தல்களின்போது அரசியல் தலைவர்கள் மேற்கொள்ளக்கூடாது.

காணாமல் ஆக்கப்படுதல், காணி உரிமைகள், வாழ்வாதாரம், வளங்களையும் அபிவிருத்தி திட்டங்களையும் அணுகுதல் என்பவை தொடர்பாக பாரபட்சமான முறையில் சட்டங்கள் பிரயோகிக்கப்படுவது மீதும் எனது கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டங்களுக்கான காரணங்களையும், ஆர்ப்பாட்டங்களின் போது பங்குபற்றுந கள் முன்வைக்கும் பிரச்சினைகளையிட்டும் அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏப்ரல் மாதத்தில் பேரழிவையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய பயங்கரவாதத் தாக்குதல், அதேசமயம் சென்ற ஆண்டு அரசமைப்பு ரீதியான நெருக்கடிகள் என்பன ஏற்பட்ட ஒரு சூழமைவில் அதற்கு மேலதிகமாக தற்போதைய அவசரகாலச் சட்டங்களின் பிரயோகம் என்பன மன அழுத்தங்களை அதிகரிக்கச் செய்துள்ளது.

சிவில் சமூகத்தின் சில உறுப்பினர்கள் தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் அமைதியாக ஒன்று கூடுவதிலும் பல கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர். இத்தகையப் பிரச்சினைகளை நாடு எதிர்நோக்கியுள்ள ஒரு தீPர்மானகரமான காலகட்டத்திலேயே எனது பயணம் அமைந்துள்ளது.

2009ஆம் ஆண்டு ஓய்ந்த நீண்டகால அழிவுகரமான போரின் பின்னர் பாதுகாப்புத் துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமை, சிவில் சமூகம் இயங்குவதில் கஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாகவும் ஏனைய சிவில் சமூக நடவடிக்கைகள் பற்றியும் தொடர்ச்சியான புலனாய்வுக் கட்டமைப்புக்களைக் கண்காணிப்பில் ஈடுபடுத்துவதன் காரணமாக மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மீது தொந்தரவையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ள நிலைமை அறிக்கையிடப்பட்டுள்ளது.

மக்கள் ஒன்றுகூடும் சுதந்திரத்திற்கான உரிமையையும் சங்கங்கள் அமைப்பதற்கான உரிமையையும் முன்னெடுக்கும் போது, நாட்டின் சில பிரதேசங்களில், நடந்த கடந்தகால நடைமுறைகள் நினைவூட்டப்படுகின்ற அதேவேளை, அச்சத்தையும் பீதியையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக ஏப்ரல் தாக்குதல்களின் பின்னர் நாட்டில் பரவலாகக் காணப்படும் பகைமை உணர்ச்சியைத் தூண்டக் கூடிய உரைகளின் வளர்ச்சி குறித்தும் கவனம் செலுத்தியுள்ளேன்” – என்றார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment