நாளை வேலைநிறுத்தம் - போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் ஓடும்


மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற கோரியும், பொதுத்துறைகளின் பங்கு விற்பனைகளை கைவிட வலியுறுத்தியும் மற்றும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் நாளை (8-ந்தேதி) மற்றும் நாளை மறுநாள் (9-ந்தேதி) நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், போக்குவரத்து கழக தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள் முழுமையாக பங்கேற்குமாறு ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., டி.யு.சி.சி., எஸ்.இ.டபிள்யூ., எல்.பி.எப். உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

இந்த அழைப்பை ஏற்று நாடு முழுவதிலும் இருந்து 15 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் என பல்வேறு சங்கங்களில் உள்ளவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கின்றனர்.இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம், டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம், போக்குவரத்து, மின்வாரிய சங்கங்களும் ஆதரவு தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் 1½ லட்சம் மத்திய அரசு ஊழியர்களுடன் சுமார் 9 லட்சம் மாநில அரசு ஊழியர்களும் பங்கேற்க உள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் வங்கி ஊழியர்களும் இன்சூரன்ஸ் ஊழியர்களும் போராட்டத்தில் குதிப்பதால் வங்கிகளில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான காசோலை பரிவர்த்தனை முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கத்தை தவிர்த்து அனைத்து தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் கலந்து கொள்வதால் தமிழகத்தில் பஸ் சேவை முடங்கும் என தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதனால் பஸ்களை நாளை பாதுகாப்புடன் இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும் பஸ் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சென்னையில் உள்ள 33 பஸ் டெப்போக்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் குறித்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வழக்கமான அலுவலக பணிகள் பாதிக்கும் வகையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தமிழக அரசு ஊழியர்கள் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது.

எனவே வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 8, 9 தேதிகளில் வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது.

தற்காலிக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.

ஆனாலும் பா.ஜனதா தொழிற்சங்கம் தவிர மற்ற தொழிற்சங்கங்கள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதால் அரசு பணிகள் கடுமையாக பாதிக்கும். வங்கி சேவை முடங்கும். மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கும் என்றே தெரிகிறது.
Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment