உள்நாட்டு யுத்தத்தில் பங்கெடுத்த தரப்பாக இலங்கை உள்ள நிலையில், அதில் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான விசாரணையில் மத்தியஸ்தம் வகிக்க முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு இடம்பெறுமாயின் அது சுயாதீனமாகவும் நேர்மையானதாகவும் அமையாதென சுட்டிக்காட்டிய சுமந்திரன், சர்வதேச பொறிமுறையே அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
இன்று கூடிய நாடாளுமன்ற அமர்வில், குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சுமந்திரன் இவ்விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச பொறிமுறையின் கீழ் விசாரணை செய்தால் நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படுமென சிலர் குறிப்பிடுவதாக சுட்டிக்காட்டிய சுமந்திரன், சர்வதேச நியமங்களுடன் இலங்கை ஒத்துப்போகின்றதென குறிப்பிட்டார். அவ்வாறு இருக்கும்போது சர்வதேச விசாரணையால் இலங்கையின் இறைமைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதென மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் யாவும் கண்துடைப்புக்காகவே இடம்பெற்றதென்றும், குற்றமிழைத்தவர்கள் நீதிக்கு முன் கொண்டுவரப்படவில்லையென்றும் தெரிவித்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தவர்களும் கடந்த ஆட்சியாளர்களின் ஊழல் மோசடிகளுக்கும் கொலைகளுக்கும் எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென சுமந்திரன் கடுமையாக சாடினார்.
குறிப்பாக, கடந்த காலத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லையென சுட்டிக்காட்டிய சுமந்திரன், பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதால் நியாயமான விசாரணைக்கு சாத்தியமில்லையென சுட்டிக்காட்டினார்.
1999ஆம் ஆண்டுமுதல் 2009ஆம் ஆண்டுவரையான காலத்தில் 9 தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டபோதும், இவர்கள் தொடர்பாக ஒரு விசாரணையும் இடம்பெறவில்லையென சுமந்திரன் சாடினார். தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை செய்ய விருப்பமின்மையே இதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் சர்வதேச பொறிமுறையின் கீழான விசாரணையே அவசியமென சுமந்திரன் வலியுறுத்தினார். இலங்கையின் நீதித்துறை சுயாதீனமாக செயற்பட்டாலும், போர்க்குற்ற விசாரணையை இலங்கையில் முன்னெடுக்க முடியாதென சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, இலங்கை அடிப்படை உரிமைகளையும் சட்டத்தையும் மதிக்கும் நாடாக இருப்பதற்கு, குற்றங்களை ஏற்றுக்கொண்டு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமென மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment