தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை!

புதுடில்லி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க ஸ்டெர்லைட் உள்ளிட்ட 21 தொழிற்சாலைகளுக்கு சுப்ரீம் கோர்ட் தடைவிதித்துள்ளது.

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உற்பத்தியாகி தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயலில் கடலில் கலக்கிறது தாமிரபரணி ஆறு. இந்த ஆற்று நீரை நம்பி தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 46 ஆயிரத்து 107 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பல லட்சக்கணக்கான மக்கள் தாமிரபரணி ஆற்று நீரை குடிநீராக பயன்படுத்துகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் இந்த அணைக்கட்டில் இருந்து குடிநீருக்காக மட்டும் தண்ணீர் எடுக்க தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்திற்கு, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2011ம் ஆண்டு முதல், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தினர் ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதியில் இருந்து தூத்துக்குடியிலுள்ள 21 தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் 9 கோடியே 20 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்து வழங்கும் 20 எம்.ஜி.டி திட்டம் நடைமுறைக்கு வந்தது. தினந்தோறும் தாமிரபரணி ஆற்றில் இருந்து ராட்சத மோட்டார்கள் மூலமாக தண்ணீரை உறிஞ்சி எடுத்து சுத்திகரித்து ''குடிநீர்'' என்ற பெயரில், தொழிற்சாலைகளுக்கு 1000 லிட்டர் தண்ணீர் வெறும் 15 ரூபாய் என்ற விலைக்கு வழங்கப்பட்டு வந்தது.

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் நோக்கத்தில் ''ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு 20 எம்.ஜி.டி திட்டத்தில் தண்ணீர் வழங்குவதற்கு நிரந்தரமாக தடை விதிக்கவேண்டும்'' என்று தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.ஜோயல் பொதுநல வழக்கு தொடர்ந்தார்

விசாரணையின் முடிவில் கடந்த ஆண்டு நவம்பர் 28 ந்தேதி ''ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கட்டில் இருந்து ஸ்டெர்லைட் தொழிற்சாலை உட்பட எந்த தொழிற்சாலைக்கும் தண்ணீர் வழங்ககூடாது, அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே வழங்கவேண்டும்'' என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இறுதி தீர்ப்பு வழங்கியது.

ஆனால் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு தடை விதிக்ககோரி, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நேற்று (ஜன.,11) நீதிபதிகள் சந்திர சூட், ஹேமந்த் குப்தா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ''ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கட்டில் இருந்து 20 எம்.ஜி.டி திட்டத்தில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கும் மற்றும் குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் எடுக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் உள்ளிட்ட எந்த தொழிற்சாலைக்கும் தண்ணீர் எடுக்கக்கூடாது'' என்று அதிரடியாக இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் வரும் 21ம் தேதிக்குள் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் விரிவான அறிக்கை தாக்கல் செய்திடவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment