தோல்வியில் முடிந்த பிரெக்ஸிட் ஒப்பந்தம்

பிரதமர் தெரீசா மேயின் பிரெக்ஸிட் ஒப்பந்தம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின உறுப்பு நாடாக பிரிட்டன் தொடர வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைவர் டொனால்டு டஸ்க் தெரிவித்துள்ளார்,

இந்த ஆண்டு மார்ச் 29ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுவதற்கு சில விதிகளையும், நிபந்தனைகளையும் உள்ளடக்கிய இந்த ஒப்பந்தம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை இரவு வாக்களித்த பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிராக 432 வாக்குகளையும், ஆதரவாக 202 வாக்குகளையும் பதிவு செய்தனர்.

இதன் மூலம், பிரிட்டன் பிரதமர் தெரீசா மே முன்னெடுத்த பிரெக்ஸிட் ஒப்பந்தம் 230 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இது தொடர்பாக ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனின் ஆளும் அரசின் மிக பெரிய தோல்வி இதுவாகும். பிரதமர் தெரீசா மேயின் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பில் அவருக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுகின்ற பிரெக்ஸிட் வழிமுறைகளில் அதிக சந்தேகங்களை இது உருவாக்கியுள்ளது.

பிரதமர் தெரீசா மேயின் அரசு மீது, தொழிலாளர் கட்சியின் தலைவரான ஜெர்மி கோபின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்திருப்பது, பொது தேர்தலுக்கு வழிவகுக்கக்கூடும்.

பிரெக்ஸிட் ஒப்பந்தம் இல்லாமல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது என்பது, ஒரேயடியாக எல்லா தொடர்புகளையும் துண்டித்து விட்டு பிரிட்டன் வெளியேறுவதாக அமைந்துவிடும்.

இதனால், பிரிட்டன் பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்படும் என்பதால், பிரிட்டன் படிப்படியாக வெளியேறுவது விரும்பப்படுகிறது.

ஆனால், பிரிட்டன் நாடாளுமன்றம் இத்தகைய ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளாத பட்சத்தில், எவ்வித ஒப்பந்தமும் இல்லாமல், எல்லா உறவுகளையும் துண்டித்துவிட்டு பிரிட்டன் வெளியேற வேண்டியிருக்கும்.

பிரிட்டனில் செவ்வாய்கிழமை நடைபெற்ற இந்த வாக்கெடுப்பு, டொனால்ட் டஸ்ன் பதிவிட்ட ட்விட்டர் பதிவு உள்பட, ஐரோப்பிய ஒன்றியம் முழுவதிலும் இருந்து பல எதிர்வினைகளை எழுப்பியுள்ளது.

ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கான நேரம் மிகவும் குறைவாக உள்ளதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜாங் கிளாடு யுங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்,

"பிரிட்டன் அதனுடைய கருத்துக்களை உடனடியாக தெளிவுப்படுத்த வேண்டும். போதிய நேரமில்லை" என்று பிரிட்டன் நாடாளுமன்ற வாக்கெடுப்பு முடிவு அறிவிக்கப்பட்டவுடன் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் கூறினார்.

ஒழுங்கற்ற முறையில் பிரிட்டன் வெளியேறுகின்ற ஆபத்து இந்த வாக்கெடுப்பால் அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பிரிட்டன் அதற்கே உரித்தான அணுகுமுறையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய பிரெக்ஸிட் தலைமை மத்தியஸ்தர் மைக்கேல் பர்னிர் கூறியுள்ளார்,

"அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என கூறுவது பிரிட்டன் அரசை பொறுத்தது" என்று கூறியுள்ள அவர் "ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கான முடிவில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உறுதியுடன் இருக்கிறது" என்கிறார்.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள ஜேர்மனி நிதி அமைச்சரும், துணை சான்சிலரான ஒலாஃப் ஷோல்ஸ், "செவ்வாய்கிழமை ஐரோப்பாவுக்கு கசப்பான நாள்" என்று கூறியுள்ளார்,

"நாங்கள் தயாராகவுள்ளோம். கடினமானதொரு பிரெக்ஸிட் ஐரோப்பாவுக்கும், பிரிட்டனுக்கும் குறைந்தபட்ச ஈர்ப்புடைய தெரிவாக இருக்கும்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

பிரெக்ஸிட் - ஏன் அயர்லாந்து எல்லை பிரதான தடையாக இருக்கிறது?
''பிரிட்டன் விரும்பினால் பிரெக்ஸிட் முடிவை ரத்து செய்ய முடியும்''
ஜெர்மனியை ஆளும் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றிய கட்சியின் தலைவர் ஆன்கிரேட் கிராம்ப் காரென்பரும் இதே கருத்தை கூறியுள்ளார்,

பிரிட்டனை பற்றி பிரான்ஸ் கருத்து தெரிவிக்கையில், "முக்கியமாக அவர்கள் மீதே அழுத்தங்கள் உள்ளன" என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவெல் மக்ரோங் கூறியுள்ளார். ஒப்பந்தம் எதுவும் இல்லாமல் வெளியேறுவது பெரும் பாதிப்பாக அமையும் என்பதால், நிலைமாற்ற காலம் முக்கியமானது என்று அவர் எச்சரித்துள்ளார். "பிரிட்டன் வெளியேறுவது பற்றி இனிமேல் திட்டமிட முடியாது என்பதால், நிலைமாற்ற காலம் பற்றி நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.

ஒப்பந்தம் எதுவும் இல்லாமல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்க செய்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளும் என்று அயர்லாந்து தெரிவித்துள்ளது.

"செவ்வாய்கிழமை இரவு வந்துள்ள வாக்கெடுப்பின் முடிவு, ஒழுங்கற்ற முறையில் பிரெக்ஸிட் நடைபெறும் ஆபத்தை அதிகரித்துள்ளது" என்று அது கூறியுள்ளது.

"இது போன்ற முடிவுகள் ஏற்படுவதற்கான தயாரிப்புக்களை அயர்லாந்து அரசு தீவிரப்படுத்தும்" என்று அது தெரிவித்திருக்கிறது.
Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment