காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா மலர்கள் ஏற்றுமதி!



காதலர் தினத்தை முன்னிட்டு 2½ கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் 100 கோடி ரூபா வர்த்தகம் நடந்ததாகவும் விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார். 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி, பேரிகை, கெலமங்கலம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பசுமை குடில் அமைத்து ரோஜா மலர் செய்கை செய்து வருகிறார்கள். குறிப்பாக பேரிகை பகுதியில்தான் அதிகளவில் ரோஜா பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் தமிழக விவசாயிகள் மட்டுமல்ல கர்நாடக விவசாயிகளும் நிலங்களை குத்தகைக்கு எடுத்து ரோஜா சாகுபடி செய்தனர்.
 இந்த ஆண்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மட்டுமல்ல தனியார் நிறுவனங்களும் ரோஜா உற்பத்தியில் ஆர்வம் காட்டினர். குறித்த தொழிலில் 2 இலட்சம் பேர் ஈடுபட்டனர்.
விவசாயம் செய்யப்பட்ட ரோஜாக்களை அந்தந்த நிலங்களுக்கே வந்து தனியார் நிறுவன அதிகாரிகள் கொள்முதல் செய்து சென்றனர். இதனால் இந்த ஆண்டு ரோஜா ஏற்றுமதி அதிகளவில் இருந்தது.

துபாய், குவைத், ஆஸ்திரேலியா, லெபனான், பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, பிரேஸில் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ரோஜா பூக்கள் அனுப்பப்பட்டன. குறிப்பாக காதலர்கள் விரும்பிய தாஜ்மகால் என்று அழைக்கப்படும் சிகப்பு ரோஜா விவசாயத்தில் அதிக ஆர்வம் காட்டினர்.
தாஜ்மகால், டோராக்ஸ், நோப்ளாஸ், கார்னியா, பர்னியர், கோல்டு ஸ்டிரைக், சவரன், அவலாஞ்ச், கார்பெட், டிராபிக்கள் அமேசான், பர்ஸ்ட்டு ரெட், கிராம் காளா உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட வகைகளில் ரோஜா மலர்கள் காதலர் தினத்துக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன.
இந்த ஆண்டு பனியின் தாக்கம் அதிகம் இருந்தாலும், பசுமை குடிலை சுற்றி பனி பெய்யாத அளவுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு அதிக அளவில் ரோஜா விவசாயம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் 2½ கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், இதன் மூலம்  100 கோடி ரூபாவுக்கு வர்த்தகம் நடந்ததாகவும் விவசாயி ஒருவர் தெரிவித்தார்.
வழக்கமாக மற்ற நாட்களில் 20 ரோஜாக்கள் கொண்ட ஒரு கொத்து  20 முதல் 50 ரூபா வரை விற்பனை ஆகும். ஆனால் இந்த ஆண்டு உள்ளூரிலேயே 20 ரோஜா மலர்கள் கொண்ட கொத்து 300ரூபா வரை விற்பனையானதாக விவசாயிகள் தெரிவித்தனர். 
வெளிநாடுகளுக்கு அனுப்பிய ரோஜாக்களால் இந்த ஆண்டு கூடுதல் விலை கிடைத்ததாகவும், ஒரு ரோஜா பூ  25 ரூபா வரை விலை போனதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மராட்டியம் உள்ளிட்ட இதர மாநிலங்களுக்கும் இந்த ஆண்டு ரோஜா அனுப்பி அதன் மூலம்  5 ரூபா கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக விவசாயி ஒருவர் தெரிவித்தார்.
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment