கஜன், சுலக்சன் படுகொலை ; நீதிமன்றில் வழக்கு

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முதலில் விபத்தில் இறந்ததாகக் கூறப்பட்ட போதும் அவர்கள்  சுட்டுப் படுகொலை செய்யப்பட்டே இறந்தனர் என்று நாம் அறிந்தோம் என வழக்கின் சாட்சிகள் சாட்சியம் அளித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொக்குவில் பகுதியில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட வழக்கின் சுருக்க முறையற்ற விசாரணை  யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது. இதில் 5 பேருடைய சாட்சியங்கள் எடுக்கப்பட்டது.

கொக்குவில் குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20 ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் கஜன் மற்றும் சுலக்சன்  சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்க முறையற்ற விசாரணை, யாழ் நீதவான் நீதிமன்றில் நீதவான் பி.போல் முன்னைலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் வழக்கு தொடுநர் சார்பாக அரச சட்டவாதி மாலினி விக்னேஸ்வ்ரன் முன்னிலையானார்.

மன்றில் வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஐவருடைய சாட்சியங்கள் பெறப்பட்டன. இதில் சாட்சியம் அளித்தவர்கள் யாழ்.பல்கலைக் கழகத்தின் இரு மாணவர்களும் மோட்டார் சைக்கிளில் பயணித்தனர். 

அவ்வாறு பயணித்தவர்கள் மது போதையில் இருக்கவில்லை. இறந்த மாணவர்கள் முதலில் விபத்தில் இறந்ததாகக் கூறப்பட்ட போதும், அவர்கள்  சுட்டுப் படுகொலை செய்யப்பட்டே இறந்தனர் என நாம் அறிந்தோம் எனச் சாட்சியம் அளித்தனர்.

யாழ். நீதிமன்றில் வழக்கு விசாரணை நேற்று எடுக்கப்பட்டபோது இறந்த மாணவர்களில் ஒரு மாணவனின் தந்தையும் சாட்சியமாக அழைக்கப்பட்ட்ட போதும், அவரது சாட்சியம் பிறிதொரு தவணைக்கு தள்ளிப் போடப்பட்டது. இதன் மேலதிக சாட்சிகளைப் பெற்றுக் கொள்வதற்காக வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்படட வழக்கில் ஐந்து பொலிஸார் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதுடன், இந்த விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டிருந்தனர்.

வழக்கு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் அண்மையில் கைது செய்யப்பட்ட பொலிஸார் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், மூவர் வழக்கிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டு அரச சாட்சியாக இணைத்துக் கொள்ளப்பட்டு மிகுதி இரு பொலிஸாருக்கும் எதிராக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment