மகிந்தவின் கதையை ஏற்க முடியாது - இரா.சம்பந்தன்

இலங்கையின் இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்று மகிந்த ராஜபக்ச தற்போது உறுதியாகக் கூறுகின்றார். இதனை நாமும் ஏற்க மாட்டோம்.  சர்வதேசம் இதனை ஏற்றுக் கொள்ளாது. பாதிக்கப்பட்ட மக்கள் சாட்சிகளாக இன்னமும் உள்ளார்கள்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெறவில்லை என்று மகிந்த ராஜபக்ச கொழும்பு நகர மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றியிருந்தார். 

இது தொடர்பில் கேட்டபோதே, சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில்தான் இறுதிப் போர் நடந்தது. போர்க்குற்றங்கள் இடம்பெற்றது. இப் போர்க்குற்றங்கள் நடைபெற்றதை தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார் என்று மகிந்த ராஜபக்ச தெரிவிப்பதை, நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். உண்மைகள் வெளிவரும்போது எதிர்ப்புக்களும் வெளிவரத்தான் செய்யும்.
மகிந்த ராஜபக்ச ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.

தற்போது போர்க்குற்றங்கள் என்று எதுவுமே இடம்பெறவில்லை என்று உறுதியாகக் கூறுகின்றார். இதனை நாமும் ஏற்கமாட்டோம். சர்வதேசமும் ஏற்காது. பாதிக்கப்பட்ட மக்கள் சாட்சியாக உள்ளார்கள். 

விசமத்தனமான பரப்புரைகளைக் கைவிட்டு தெற்கிலுள்ள அரசியல்வாதிகள் அனைவரும் ஐ.நா. தீர்மானங்களுக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டும். நாட்டின் நன்மதிப்பைக் காப்பாற்றவேண்டும்  என்றார்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment