கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலய மாணவனின் பாதுகாப்பு கருதி, குறித்த பாடசாலை ஆரம்பிக்கும் போதும் நிறைவுறும் போதும் குறித்த பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுவர் என கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பணிபுரைக்கமைய பாடசாலைகளில் கடைப்பிடிக்கப்பட்ட தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் போது, கஞ்சா விற்பனை பற்றி பொலிஸாருக்கு தகவல் வழங்கிய மாணவன் அச்சுறுத்தப்பட்ட பின்னர் தாக்கப்பட்ட சம்பவம் பல்வேறு மட்டங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சி. தவராசாவின் ஏற்பாட்டில் குறித்த மாணவனின் தந்தை, வடக்கு மாகாண ஆளுநரை நேற்று சந்தித்து தனது மகனின் பாதுகாப்புத் தொடர்பில் கலந்துரையாடினார். இதனையடுத்து வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகிந்த குணரட்னவை தொடர்பு கொண்டு கலந்துரையாடியதற்கமைய மாணவனின் தந்தை பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் அனுப்பி வைக்கப்பட்டார்.
உரிய பொலிஸ் அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் கிடைத்த இரண்டு முறைப்பாடுகளில் ஒன்றுக்கு மூன்று பெண்களை கைது செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் எனவும் மாணவன் தாக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தோடு பாடசாலை அதிபருடன் மாணவனின் பாதுகாப்புத் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். சில வாரங்களுக்கு குறித்த பாடசாலை ஆரம்பிக்கும் போதும் முடிவுறும் போதும் பொலிஸ் சுற்றுக்காவல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாணவனின் பெற்றோர் எவ்வேளையும் எங்களுடன் தொடர்பு கொள்வற்குரிய ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.' என்றும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment