இன்னும் இரு மாதங்களில் தூக்குத் தண்டனை

எவர் எதிர்த்தாலும் இரண்டு மாத காலத்தில் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவித்த அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன பாதாள உலகக்குழு, போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு ஆதரவாக மனித உரிமை அமைப்புக்கள் செயற்படுகின்றன என்றும் குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று  குற்றவாளிகளை ஒப்படைத்தல் சட்டத்தின் கீழ் கட்டளை விதிகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அரச தலைவர் இதனைத் தெரிவித்தார்.

உலக நாடுகள் பலவற்றிலும் மிகப்பெரும் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுவது நடைமுறையில் உள்ளது. இந்தியா, அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் மின்சாரக் கதிரை மற்றும் ஊசி மூலமான தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

எமது நாட்டிலும் சமய ரீதியான பண்படுத்தல் இடம்பெறுகின்றபோதும், சட்டதிட்டங்கள் மூலமான பண்படுத்தல் அவசியமாகிறது. அதற்காகவே நாம் போதைப்பொருளுடன் தொடர்புடைய பெரிய குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் தீர்மானத்தை எடுத்தோம்.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலை எனது பார்வைக்காக அனுப்புமாறு நான் கேட்டிருந்தேன். எனினும் அந்தப் பட்டியல் கால தாமதமாகியே எனக்குக் கிடைத்தது. அதன் ஆவணங்களை சில காலங்கள் தேடமுடியாமலும் போனது.

உண்மையில் கடந்த ஜனவரி மாதமே தூக்குத்தண்டனைக் கைதிகள் தொடர்பான உண்மையான அறிக்கை எனது கையில் கிடைத்தது. தூக்குத் தண்டனை தொடர்பில் நான் பகிரங்கமாக அறிவித்த பின்னர் மௌனமாகவிருந்த கைதிகளும் மேன்முறையீடு செய்வதற்கு முற்பட்டுள்ளனர்.

தூக்குத் தண்டனை பட்டியலில் பாகிஸ்தான் குடிமகன் ஒருவரும் உள்ளார். அவரைப் பாகிஸ்தானுக்கு அனுப்புவதற்கு அந்த நாட்டுடன் நாம் பேச்சு நடத்தியபோதும் அவர் அங்கு செல்வதற்கு மறுப்புத் தெரிவிக்கிறார்.  எமது நாட்டைப் போலல்லாது அந்த நாட்டில் தூக்குத் தண்டனை உடனடியாக நிறைவேற்றப்படும் என்ற அச்சத்திலேயே அவர் அவ்வாறு கூறுகிறார்.

எவர் எதிர்த்தாலும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் நான் பின்நிற்கப்போவதில்லை. இரண்டு மாதத்தில் சாவுத் தண்டனை நிறைவேற்றம் நடைமுறைக்கு வரும். இதுபோன்ற விடயங்களில் பாதாள உலகக்குழு, போதைவஸ்து வர்த்தகர்களுக்கு ஆதரவாக மனித உரிமை அமைப்புக்கள் செயல்படுகின்றன.

மனித உரிமை அமைப்புக்கள் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போதைப்பொருள் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கு முயற்சிக்கக் கூடாது. என்னால் நியமிக்கப்பட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவே எனது செயற்பாடுகளுக்குத் தடையாக உள்ளது.

உண்மையில் நாட்டில் முக்கியமான போதைப்பொருள் மையமாக வெலிக்கடை சிறைச்சாலை உள்ளது. அங்குதான் அதற்கான அனைத்து யுக்திகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதனைத் தடுப்பதற்கான உரிய வேலைத்திட்டமொன்றை நாம் நீதியமைச்சுடன் இணைந்து நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள போதைப்பொருள் குற்றவாளிகளை பூசா சிறைச்சாலைக்கு அனுப்பி வெலிக்கடை சிறைச்சாலையை மறுசீரமைக்கத் தீர்மானித்துள்ளோம். 

வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்து பூசா சிறைச்சாலை கொண்டுசெல்லப்பட்டவர்களுக்கு அங்கு சிறப்பு அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டது. மனித உரிமை அமைப்புக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. 

அதேபோன்று அங்குனுகொலபலச சிறைச்சாலைக்கும் நாம் அதிரடிப்படை பாதுகாப்பை வழங்கியபோது அங்கு கடமையிலிருந்த அதிரடிப்படை அதிகாரிகளிடம் மனித உரிமை அமைப்புக்கள் கேள்வி கேட்டுள்ளன.

நாம் மேற்கொள்ளும் பல்வேறு நாட்டுக்குத் தேவையான நல்ல விடயங்களுக்கு மனித உரிமை அமைப்புக்கள் தடையாகவுள்ளன. மாலியில் இறந்துபோன எமது படைவீரர்கள் தொடர்பிலும் எமது மனித உரிமை அமைப்புக்கள் மிக மோசமாக செயற்பட்டன  என்றார்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment