நீண்ட விவாதத்தையடுத்து மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு கட்டப்பட்ட கட்டடத்தை யாழ் மாநகரசபை முழுமையாகப் பொறுப்பேற்பது என்றும் இதுவரை வாடகைக்கு விடப்படாத கடைத் தொகுதிகள் குறித்து தீர்மானிக்கும் எனவும் மாநகரசபையின் இன்றைய விசேட அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

யாழ் மாநகரசபைக்குச் சொந்தமான காணியில் ஈபிடிபி ஆட்சியின்போது தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு கட்டடம் கட்டப்பட்டது.


இதேவேளை இந்தக் கட்டடத் தொகுதியில் 3,4 ஆம் மாடிகளை மகேஸ்வரி நிதியத்திற்கு வழங்காவிட்டால் குறித்த தீர்மானத்திற்கு தாங்கள் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று கூறிய ஈபிடிபியினர் தீர்மானத்திற்கு வாக்கெடுப்புக் கோரினர். 

இதையடுத்து, ஈபிடிபியின் 11 உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இணைந்து தீர்மானத்தை ஆதரிக்க பெரும்பான்மையுடன் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

யாழ் மாநகர முதல்வராக இருந்த யோகேஸ்வரி பற்குணராசாவினால் யாழ்.கஸ்தூரியார் வீதிப்பகுதியில் முறைகேடான ஒப்பந்தங்களின் அடிப்படையில் கட்டப்பட்ட கட்டடத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் தளங்களை கட்டுவதற்கு கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனத்திற்கு நிதி வழங்கியதாகக் கூறி மகேஷ்வரி நிதியம் அதனைக் கையகப்படுத்தியிருந்து. 


குறித்த தளங்களில் ஈபிடிபியினால் நடாத்தப்படும் டிடி ரிவி தொலைக்காட்சி நிலையம் உள்ளிட்டவை இயங்கிவருகின்றன. அதற்கான வாடகைப் பணமும் இதுவரை செலுத்தப்படவில்லை.

இந்த நிலையில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்றும் குறித்த கட்டடம் முறைகேடான முறையில் கட்டப்படவில்லை என்று ஈபிடிபியினர் குறிப்பிட்டனர்.குறித்த கட்டடத்திலிருந்து தாம் வெளியேறமாட்டோம் எனக் கூறியவர்கள் யாழ் மாநகரசபை விரும்பினால் வழக்குத் தொடரட்டும் என்றும் மேசை மீது அடித்து சவால் விடுத்தனர்.

எனினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் வை.கிருபாகரன் குறித்த கட்டடம் அமைப்பதில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகளை ஆதாரங்களுடன் முன்வைத்திருந்தார்.

யாழ் மாநகரசபையின் முன்னாள் ஆணையாளர்கள் அதிகாரிகள் குறித்த விடையங்களைத் தவறாகக் கையாண்டதாகவும் ஓய்வுபெற்ற நீதியரசர்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கைகள் அம்புலிமாமா கதைகள் எனக்கூறி சபை அமர்வைக் கலவரமாக்கினர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் மாநகரசபையின் உறுப்பினர் ஒருவரது வாக்குமூலம் ஒன்றை வாசித்துக் காட்டி குறித்த கட்டடம் அமைப்பதற்கான ஒப்பந்தம் ஈபிடிபியின் அலுவலகத்தில் வைத்தே மேற்கொள்ளப்பட்டது என்றும் தான் அங்கு அழைக்கப்பட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட வைக்கப்பட்டதாகவும் வாசித்தார். 

இதனையடுத்து குறிப்பிட்ட முதல்வர் அன்றைய காலகட்டத்தில் புறச் சூழல் மிக மோசமாக இருந்தது என்றும் அதனால் அதிகாரிகள் சில நடவடிக்கைகளில் வேறு வழியின்றி ஈடுபடவேண்டியிருந்தது எனவும் கூறினார்.

நீண்டநேர விவாதத்தையடுத்து கட்டடத் தொகுதியை யாழ் மாநகரசபை பொறுப்பேற்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட ஈபிடிபி கட்டடத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் தளங்களை மகேஸ்வரி நிதியத்திற்கு கையளிக்கவேண்டும் என நிபந்தனை விதித்தது.

கட்டப் பணியை மேற்கொண்டிருந்த நிறுவனம் மூன்றாம் நான்காம் தளங்களை மனேஸ்வரி நிதியத்திற்கு வழங்க இணங்கி அவர்களிடம் பணம் பெற்றே கட்டடப் பணி மேற்கொண்டது எனவும் அந்நிறுவனத்தினால் யாழ் மாநகரசபையுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்களின் சிபாரிசான மகேஸ்வரி நிதியத்திற்கே மூன்றாம் மற்றும் நான்காம் தளங்களை வழங்க வேண்டும் என்றும் வாதிட்டனர்.

அதற்கு பல உறுப்பினர்கள் உடன்பட மறுத்தனர். ஈபிடிபி ஆட்சியின்போது தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு கட்டப்பட்ட கட்டதத்தை யாழ் மாநகரசபை முழுமையாகப் பொறுப்பேற்பதாகத் தெரிவித்தது.


இதுவரை வாடகைக்கு கொடுக்கப்படாத கடைத் தொகுதிகள் தொடர்பில் யாழ் மாநகரச சபை தீர்மானிக்க வேண்டும் என முன்னணி உறுப்பினர் கிருபாகரனும், முதல்வர் ஆர்னோல்ட்டும் முன்வைத்த கருத்துக்கள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.

இதற்கு தாம் எதிர்ப்பு வெளியிடுவதாக ஈபிடிபியின் 11 உறுப்பினர்கள் தெரிவித்து இதன்போது வாதங்களில் ஈடுபட்டனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரினின் கடுமையான வாதங்களையடுத்து ஈபிடிபியின் 11 உறுப்பினர்களின் எதிர்ப்பை மீறி கட்டடத் தொகுதியை யாழ் மாநகரசபை கையகப்படுத்தும் தீர்மானத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்கின.
Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment