யாழ். பல்கலை பகிடிவதை விவகாரம் பொலிஸார் பாரபட்சம்

யாழ்ப்பாண பல்கலைக் கழக தொழில்நுட்ப பீடத்தில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவம் தொடர்பில் பொலிஸார் பாரபட்சமாக நடந்து கொள்வதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கைப் பல்கலைக் கழகங்களில் பகிடிவதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டு மிகப் பாரதூரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

யாழ்.பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் கடந்த 25 ஆம் திகதி   பகிடிவதைச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

இது தொடர்பாக பெற்றோரிடமிருந்தும், பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாகவும் கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து
பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் மற்றும் உப விடுதிக் காப்பாளர் ஆகியோர் பகிடிவதை தொடர்பாக சிரேஸ்ட மாணவிகளிடம் விசாரனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, சிரேஸ்ட மாணவிகள் தொழில்நுட்ப பீட வளாகத்தினுள் குழப்பங்களை ஏற்படுத்தினர். இதனால் அங்கு ஏற்பட்ட பதட்ட நிலை காரணமாக துணைவேந்தரின் அறிவித்தலுக்கு அமைய தொழில்நுட்ப பீடம் மறு அறுவித்தல் வரை மூடப்பட்டது.

இதனையடுத்து நேற்று தொழில்நுட்ப பீடத்திற்குச் சென்ற கிளிநொச்சி பொலிஸார் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தும் பாணியில்  உப விடுதிக் காப்பாளரை கைது செய்யப் போவதாக மிரட்டினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நாளை (இன்று) பெண் உப விடுதிக் காப்பாளர் ஒருவரை முன்னிலையாகுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பப்பட்டிருக்கின்றது.

சட்டத்துக்கு முரணான வகையில் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பல்கலைக் கழகத்தின் ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்களைக் காப்பாற்றும் வகையிலும் பகிடிவதையைத் தடுக்கும் நோக்கில் செயலாற்றும் உத்தியோகத்தர்களை அச்சுறுத்தும் வகையில் கிளிநொச்சி பொலிஸார் நடந்து கொண்டமை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு யாழ்.பல்கலைக் கழக துணைவேந்தர் வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க முற்படுகின்ற போது இத்தகைய அச்சுறுத்தல்கள் ஏற்படுமாயின் எதிர்காலத்தில் தாங்கள் தங்கள் கடமையைச் செய்வதில் பிரயோசனம் இல்லை என்று பல்கலைக் கழகத்தின் சிரேஸ்ட அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment