மனைவியும் மைத்துனியும் செய்த காரியம்

தங்கையுடன் சேர்ந்து கணவரை மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தச் சம்பவம் செங்கல்பட்டை அடுத்த ஆலம்பாக்கம் பகுதியில் நடந்துள்ளது.

47 வயதான சிவகுமார் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிப்புரிந்து வந்தார். இவரது மனைவி சந்திரா.  இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 

வீட்டு மாடியிலிருந்து கடந்த 9 ஆம் திகதி இரவு சிவகுமார் கீழே விழுந்து கிடந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

மது போதையில் அவர் மாடியிலிருந்து கீழே விழுந்ததாக பொலிஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இதற்கிடையே சிவகுமார் மரணத்தில்  மர்மம் இருப்பதாக அவரது தாய் செங்கல்பட்டு தாலுகா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். பிரேத பரிசோதனையில் சிவகுமார் வி‌ஷம் கொடுத்தும், கழுத்தை இறுக்கியும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. 

சிவகுமாரின் மனைவி சந்திராவிடம்  நடத்தப்பட்ட விசாரணையின்போது,  நானும், தங்கை மாரியம்மாளும் சேர்ந்து சிவகுமாருக்கு மதுவில் வி‌ஷம் கலந்து கொடுத்தும், கழுத்தை நெரித்தும் கொன்றதாக தெரிவித்துள்ளார்.

பொலிஸாரிடம் சந்திரா மேலும் தெரிவித்ததாவது,

கணவர் சிவகுமார் அடிக்கடி தங்கை மாரியம்மாளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனைக் கண்டித்தும் அவர் கேட்கவில்லை. இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.

கணவர் சிவகுமாரை தீர்த்து கட்ட நாங்கள் முடிவு செய்தோம். வழக்கமாக சிவகுமார் வீட்டு மாடியில் மது குடிப்பது வழக்கம். கடந்த 9 ஆம் திகதி  இரவு அவர் வாங்கி வைத்திருந்த மதுவில் வி‌ஷத்தை கலந்து வைத்தோம். இதனை தெரியாமல் அவர் குடித்து மயங்கினார்.

உடனே நானும், தங்கை மாரியம்மாளும் சேர்ந்து கணவர் சிவகுமாரின் கழுத்தை இறுக்கி கொன்றோம். பின்னர் கொலையை மறைப்பதற்காக வீட்டு மாடியிலிருந்து உடலை கீழே தள்ளிவிட்டோம்.

அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் மதுபோதையில் சிவகுமார் கீழே விழுந்து இறந்துவிட்டதாகக் கூறி நாடகமாடினோம் எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சந்திராவையும், மாரியம்மாளையும் பொலிஸார் கைது செய்தனர். குறித்த  கொலைக்கு  வேறு யாரேனும் அவர்களுக்கு உதவினார்களா? வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. 


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment