கோத்தாவை களமிறக்க மகிந்தவே விரும்ப மாட்டாராம் - என்கிறார் வெல்கம

கோத்தபாய ராஜபக்‌சவை முன்னாள் பாதுகாப்புச் செயலர் என்று கூறுவதற்கு வெட்கப்படுகின்றோம். அவர் ஒரு போர்க்குற்றவாளி. இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்படியான அவரை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்க மகிந்த ராஜபக்‌ச விரும்பமாட்டார். நாமும் அவர் வேட்பாளராகக் களமிறங்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். என்றும் அவர் குறிப்பிட்டார்.


 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான குமார வெல்கம முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் நெருங்கிய சகாக்களில் ஒருவர்.

இவர் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே மேற்படி விடயத்தைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

இரத்த உடை அணிந்துள்ள ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க முடியாது. தேசிய உடை அணிந்த வெற்றி பெறக்கூடிய ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க வேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ச தோல்வியடைய கோத்தபாய ராஜபக்‌சவே பிரதான காரணம். எனவே, எனது நண்பர் மகிந்தவின் தோல்விக்குக் காரணமாக இருந்தவரை வேட்பாளராக எப்படிக் களமிறக்க முடியும்?

தமிழ், முஸ்லிம் மக்களின் கண்களில் கோத்தபாயவைக் காட்டவே கூடாது. அவர் மீது அப்படிக் கோபத்தில் அம்மக்கள் இருக்கின்றார்கள். அந்த மக்களைக் கடத்திப் படுகொலை செய்தமை மட்டுமன்றி அவர்களின் சொத்துக்களையும் கோத்தபாய அழித்துள்ளார். 

மகிந்தவின் ஆட்சியில் முஸ்லிம் மக்களின் பள்ளிவாசல்கள் மர்மக் குழுவினரால் தாக்கப்படுவதற்கு கோத்தபாய ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.

சிங்கள மக்கள் மத்தியிலும் கோத்தபாயவுக்கு எதிரான கருத்துக்கள் உள்ளன.

ராஜபக்‌ச குடும்பத்தில் நல்லவர்கள் உள்ளனர். ஆனால், கோத்தபாய போல் ஒரு தீயவர் அந்தக் குடும்பத்தில் இருப்பதால் அந்தக் குடும்பத்துக்கு எதிராக ஒரு கறுத்தப்புள்ளி குத்தப்பட்டுள்ளது. 

இதை மகிந்த ராஜபக்‌ச களைந்தெடுக்க வேண்டும். நல்லதொரு வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டும் – என்றார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment