மணப் பெண்ணாக மாறிய பெண் பொலிஸார் ; மோசடி ஆசாமி கைது

மணப்பெண் தேவை என்று விளம்பரப்படுத்தி அதை பார்த்து வரும் பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்த குற்றச் சாட்டில் நேற்றுமுன்தினம் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

காங்கேசன் துறையைச் சேர்ந்த பெண் பொலிஸ் அலுவலகர் ஒருவர் திருமணப் பெண்ணாகப் பாசாங்கு செய்து குறித்த நபரைக் கோவிலுக்கு வருமாறு அழைப்பு விடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

மணப் பெண் தேவை என்று பத்திரிகையில் வந்த விளம்பரத்தைப் பார்த்த பெண் வீட்டார் அதில் போடப்பட்ட அலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு திருமணத்துக்கான பேச்சுவார்தையில் ஈடுபட்டனர்.

 சீதனப் பணமான 9 இலட்சம் ரூபாவை உடன் தருமாறு மணமகன் கேட்டதையடுத்து அந்தப் பணத்தை வைப்பிலிட்டுள்ளனர் பெண் வீட்டார். திருமணத்துக்கும் நாள் பார்க்கப்பட்டது. எனினும் மாப்பிள்ளையுடன் தொடர்பு கொள்ளமுடியவில்லை.

அலைபேசி இலக்கமும் செயலிழந்திருந்தது, அவருடைய வீட்டுக்குச் சென்ற போது அங்கும் அவர் இல்லை.

சந்தேகம் கொண்ட பெண் வீட்டார் காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்தனர். அவருடைய அலைபேசி இலக்கத்தை வைத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். அவர் தற்போது பயன்படுத்தும் அலைபேசி இலக்கத்தைப் பெற்றுக் கொண்டனர்.

காங்கேசன்துறை குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸாரின் உதவியை நாடினர். அவர் மற்றுமொரு கல்யாணப் பெண்போன்று பாசாங்கு செய்து அவருடன் உரையாடினார்.

ஆசைவார்த்தைகளை கூறி. பெண் பார்க்க அவரை அழைத்தார். நேற்றுமுன்தினம் மருதடி பிள்ளையார் ஆலயத்தில் பெண் பார்க்கும் படலம் இடம்பெற்றது.

அங்கு வந்த சந்தேகநபரை மறைந்திருந்த காங்கேசன் துறைப் பொலிஸார் கைது செய்தனர்.

விசாரணைகளில் சந்தேகநபர் விவாகரத்துப் பெற்றவர் என்பது தெரியவந்திருக்கின்றது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் அராலிப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment