கடந்த பத்து வருடங்களாக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள படம் 'பசங்க'. பாண்டிராஜ் இயக்கத்தில் கிஷோர், ஸ்ரீராம், விமல், வேகா, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்த இந்தப் படம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதி வெளிவந்தது.
கிஷோர், ஸ்ரீராம் சிறந்த குழந்தை நட்சத்திரங்களாகவும், பாண்டிராஜ் சிறந்த வசனத்திற்காகவும், சிறந்த பிராந்திய மொழித் திரைப்படம் ஆகிய தேசிய விருதுகளையும் இந்தப்படம் பெற்றது. இயக்குனரும், நடிகருமான சசிகுமார் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.
10 ஆவது வருடத்தை நிறைவு செய்த 'பசங்க' பற்றி இயக்குனர் பாண்டிராஜ், தெரிவிக்கையில்,
பசங்க படம் ரிலீஸ் ஆகி 10 வருடம் ஆகிறது. முதலில் உதவி இயக்குநர் வாய்ப்புத் தேடும் போது ஒரு படத்திலாவது உதவி இயக்குனராக டைட்டில் கார்டு வாங்கிவிட வேண்டும் என்ற ஆசை. உதவி இயக்குனராகி 7 படங்கள் வேலை பார்த்த பிறகு, ஒரு படத்திற்காவது இயக்குனர் ஆகிவிட வேண்டும் என்ற பேராசை.
'பசங்க' படம் பண்ணும் போது இது முதல் படமாகவும், கடைசிப் படமாகவும் கூட இருக்கலாம் என்றே நினைத்தேன். இதோ இன்று 10 ஆவது ஆண்டு. 10 ஆவது ஆண்டில் 9 ஆவது படத்துடன்... சேரன் சார், தங்கர்பச்சான் சார், சசிகுமார் சார், அசோக்குமார், கதிர், வாசு எனது அனைத்துத் தயாரிப்பாளர்கள், பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் நண்பர்களாகிய நீங்கள்...என அனைவருக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார் பாண்டிராஜ்.
0 comments:
Post a Comment