ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய இன்சாப் அஹமட் என்பவருக்கு சொந்தமான, வெல்லம்பிட்டியிலுள்ள செப்புத்தொழிற்சாலையில் பணிபுரிந்த அப்துல்லா என்றழைக்கப்படும் கருப்பையா ராஜேந்திரன் என்பவரிடமிருந்து 75 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று காசோலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த விடயத்தை கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் வெல்லம்பிட்டி பொலிஸார் இன்று -17- அறிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், செப்புத்தொழிற்சாலையின் உரிமையாளருடன் நெருங்கிய தொடர்பினைப் பேணியுள்ளதாக வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கருப்பையா ராஜேந்திரனின் திருமண நிகழ்விற்கு செப்புத்தொழிற்சாலையின் உரிமையாளர் இரண்டு இலட்சம் ரூபா பணம் வழங்கியமை தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழரான குறித்த சந்தேகநபர் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு மேலதிக நீதவானுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அப்துல்லா என்றழைக்கப்படும் கருப்பையா ராஜேந்திரனை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த 6 ஆம் திகதி நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள செப்புத்தொழிற்சாலையின் 9 ஊழியர்களின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பான அறிக்கையைப் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் 10 பேரின் வங்கிக் கணக்குகள் தொடர்பான அறிக்கையை வெல்லம்பிட்டிய பொலிஸாருக்கு வழங்குமாறு அரச மற்றும் தனியார் வங்கிகள் சிலவற்றுக்கு மேலதிக நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
0 comments:
Post a Comment