ஏமாற்றிய ஏப்ரல், மீண்டும் பேய் ஹிட்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் என்றாலே விசேஷமான மாதம். பொங்கல், தீபாவளி ஆகிய விசேஷ நாட்கள் அளவிற்கு ஏப்ரல் மாதத்தில் வரும் தமிழ்ப் புத்தாண்டு தினமும் பட வெளியீட்டிற்கு விசேஷமான நாளாக இருக்கும்.

ஆனால், இந்த 2019ம் வருடத்தில் ஏப்ரல் மாதம் மொத்தமாகவே ஏமாற்றமான நாளாகவே அமைந்தது. குறிப்பாக 'காஞ்சனா 3' என்ற ஒரே ஒரு படத்தைத் தவிர மற்ற படங்கள் அனைத்துமே அனைவரையும் ஏமாற்றிய படங்களாகத்தான் இருந்தன.

தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று ஒரு புதிய படம் கூட வெளியாகவில்லை. மாறாக அதற்கு சில நாட்கள் முன்னதாக சில படங்களும், பின்னதாக சில படங்களும் வெளியாகின. 

நல்ல நாள் சென்டிமென்ட்டை விட தொடர் விடுமுறை நாள் எது, எந்த நாளில் படங்கள் வெளியானால் வசூல் தொடர்ந்து கிடைக்கும் என அனைவரும் கணக்கு போட்டுத்தான் படங்களை வெளியிடுகிறார்கள்.

ஏப்ரல் 4ம் தேதி 'நட்பே துணை' படம் வெளிவந்தது. தான் முதலில் இயக்கிய 'மீசைய முறுக்கு' படம் கொடுத்த வெற்றியால் மீண்டும் நட்பின் பெருமையை நினைத்து இந்தப் படத்தில் நடித்தார் ஹிப்ஹாப் தமிழா. வெளியீட்டிற்கு முன் இருந்த பரபரப்பு வெளியீட்டிற்குப் பின் காணாமல் போனது.

ஏப்ரல் மாதம் 5ம் தேதி 'கணேசா மீண்டும் சந்திப்போம், குடிமகன், குப்பத்து ராஜா, உறியடி 2' ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் 'குடிமகன்' படம் நல்ல கருத்தைச் சொன்ன படம். வழக்கம் போல கருத்து சொல்லும் படங்களை மக்கள் புறக்கணிப்பதால் இந்தப் படமும் ரசிகர்களால் புறக்கணிக்கப்பட்டது. ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்த படம் என்பதைத் தவிர 'குப்பத்து ராஜா' படத்திற்கு எந்த சிறப்புமில்லை. 'உறியடி' படம் நல்ல விமர்சனத்தைப் பெற்றதால் 'உறியடி 2' படத்தை நடிகர் சூர்யாவே தயாரித்தார். ஆனால், மக்களிடம் கொண்டு செல்லும் வேலையை படக்குழுவினர் சுத்தமாகப் பார்க்கவில்லை. அப்படி செய்திருந்தால் படம் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டியது. 'கணேசா மீண்டும் சந்திப்போம்' படத்தை யார் தியேட்டர் சென்று சந்தித்தார்கள் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏப்ரல் 12ம் தேதி 'கேங்ஸ் ஆப் மெட்ராஸ், ராக்கி தி ரிவென்ஞ்ச், வாட்ச்மேன், ழகரம்' ஆகிய படங்கள் வெளிவந்தன. முதல் மூன்று திரைப்படங்களும் ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டு வெளிவந்த படங்கள். பெயர் மட்டும் வைத்தால் போதுமா அதில் பத்து சதவீதமாவது ஆங்கிலப் படங்கள் போல இருக்க வேண்டாமா. 'ழகரம்' படத்தை பத்து லட்சத்தில் எடுத்து முடித்ததாகச் சொல்கிறார்கள். பத்து தியேட்டரில் கூட படத்தை வெளியிடவில்லை.

ஏப்ரல் 19ம் தேதி 'காஞ்சனா 3, மெஹந்தி சர்க்கஸ், வெள்ளைப் பூக்கள்' ஆகிய படங்கள் வெளிவந்தன. 'காஞ்சனா, காஞ்சனா 2' ஆகிய படங்கள் கொடுத்த அசாத்திய வெற்றி 'காஞ்சனா 3'க்கும் கிடைத்தது ஆச்சரியம்தான். கதையே இல்லாத படம் என பலர் விமர்சனம் செய்தாலும் வசூலில் ஏமாற்றவில்லை. 'மெஹந்தி சர்க்கஸ்' அதிகம் எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றிய படம். அழுத்தமான காதல் இல்லாத காரணத்தால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. 'வெள்ளைப்பூக்கள்' நல்ல முயற்சி, விமர்சனம் கிடைத்த அளவிற்கு வசூல் கிடைத்திருக்காது.

எப்ரல் 26ம் தேதி 'அழகரும் ரெண்டு அல்லக்கைகளும், முடிவில்லா புன்னகை' ஆகிய படங்கள் வெளிவந்தன. வழக்கம் போல பட எண்ணிக்கையைக் கூட்டிய படங்கள் இவை.

முதலில் சொன்னது போலவே, 'காஞ்சனா 3' மட்டுமே ஏப்ரல் மாத வெற்றிப் படமாக அமைந்தது. மற்ற படங்கள் நிச்சயம் முதலுக்கு மோசமான படங்களாகத்தான் அமைந்திருக்கும். 

ஏப்ரல் மாதம் தமிழ்ப் படங்கள் ஏமாற்றினாலும் ஹாலிவுட் படமான 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' படம் பல தியேட்டர்காரர்களுக்கு வசூல் ரீதியாக லாபத்தைக் கொடுத்த படமாக இருந்தது. இந்தப் படத்தைக் காரணம் காட்டியே பல படங்களின் வெளியீடுகள் மே மாதம் தள்ளி வைக்கப்பட்டன. இந்த மாதத்தில் அவை என்ன சாதனை செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏப்ரல் மாதம் வெளியான படங்கள்

ஏப்ரல் 4 : நட்பே துணை

ஏப்ரல் 5 : கணேசா மீண்டும் சந்திப்போம், குடிமகன், குப்பத்து ராஜா, உறியடி 2

ஏப்ரல் 12 : கேங்ஸ் ஆப் மெட்ராஸ், ராக்கி தி ரிவென்ஞ்ச், வாட்ச்மேன், ழகரம்

ஏப்ரல் 19 : காஞ்சனா 3, மெஹந்தி சர்க்கஸ், வெள்ளைப் பூக்கள்

ஏப்ரல் 26 : அழகரும் ரெண்டு அல்லக்கைகளும், முடிவில்லா புன்னகை


Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment