வடக்கு கிழக்கிற்கு தனித்துவமான ஒரு அடையாளத்தை வழங்குவது அவசியம் !!

இலங்கை பௌத்த நாடென்றால், வடக்கு கிழக்கிற்கு தனித்துவமான ஒரு அடையாளத்தை வழங்குவது அவசியம் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு இலங்கை பௌத்த நாடென கூறுவது, சிறுபான்மையினரை அடிமைப்படுத்த முன்னெடுக்கப்படும் நடவடிக்கையே என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு வழங்கிய வாராந்த கேள்வி – பதிலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையானது அதன் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தம். தனி இனமோ மதமோ அதனைச் சொந்தம் கொண்டாட முடியாது. இது பல்லின மக்கள் வாழும், பல மதங்கள் நிலவும், பன் மொழிகள் பேசப்படும் நாடாகும்.
இலங்கை பௌத்த சிங்கள நாடு என்று கூறுவதன் காரணம் என்ன என்று நாம் பரிசீலிக்கவேண்டும். இது உண்மையில் இலங்கையில் சிறுபான்மையினரை அடிமைப்படுத்த, பயப்படுத்த, அந்நியப்படுத்த எடுத்து வரப்படும் நடவடிக்கைகள் என்றேக் கூற வேண்டும்.
இந்நாட்டின் பூர்வீகக் குடிமக்கள் இந்துத் தமிழ் மக்களே. அவர்கள் புத்த பிரான் பிறப்பதற்கு முன்னரே இலங்கையில் வாழ்ந்து வந்துள்ளனர். பௌத்தமானது இலங்கைக்குக் கொண்டுவந்தபோது அம்மதத்தை முதன் முதலில் தழுவியவர்கள் தமிழர்களே ஆவர்.
உண்மையில் 1956ஆம் ஆண்டு ‘சிங்களம் மட்டும் சட்டம்’ கொண்டுவரப்பட்டபோது சிங்களத்தை ஒரேயொரு உத்தியோகபூர்வ மொழியாக இலங்கை பூராகவும் பிரகடனம் செய்தமை இலங்கையை சிங்கள பௌத்த நாடாக மாற்ற உள்ள ஆவலும் ஆசையும் அவசரமும் அவர்களுக்கு இருந்தமையை எடுத்துக்காட்டுகின்றது.
அதாவது இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடல்ல. ஆனால் அதனை சிங்கள பௌத்த நாடாக மாற்ற வேண்டும் என்ற ஒரு கருத்து பல சிங்கள அரசியல்வாதிகளையும் புத்திஜீவிகளையும் பீடித்துள்ளமை தெரியவருகின்றது.
இலங்கையின் மொத்த சனத்தொகையில் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் சிங்கள பௌத்தர்கள் என்ற முறையில் இது சிங்கள பௌத்த நாடென்றால் வடக்கு கிழக்கை சிங்கள பௌத்த நாடு என்ற கருத்தமைப்புக்கு வெளியே எடுத்து அதற்கு தனித்துவமான ஒரு அடையாளத்தை வழங்குவது அவசியம்” என மேலும் தெரிவித்துள்ளார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment