இனிவரும் காலங்களிலாவது சரியான குற்றவாளியை பயங்கரவாத
தடைச்சட்டத்தில் கைது செய்து அவர்களை விசாரியுங்கள். மாறாக குற்றம்
செய்யாதவர்களை இந்தச்சட்டத்தின் கீழ் கைது செய்தால் அவர்களது குடும்பம் பொருளாதாரம் கேள்விக்குறியாகும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி அஜந்தன்.
கடந்த ஆண்டு வவுணதீவு காவலரணில் காவல் கடமையிலிருந்த பொலிஸார் இருவர் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டிருந்தனர். இது தொடர்பில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் அஜந்தன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
ஒருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அஜந்தன் தொடர்ந்து பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பிரதான சூத்திரதாரியான சர்ஹானின் வாகன சாரதி கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் வவுணதீவு பொலிஸாரை தாங்களே கொலை செய்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதனடிப்படையில் அஜந்தனை விடுதலை செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததற்கு அமைவாக 5 மாதங்களுக்குப் பின்னர் நேற்று காலை (11) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி தியாகேஸ்வரன் முன்னிலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து நேற்று (11) மாலை மட்டக்களப்பு கன்னன்குடாவிலுள்ள
அவரது இல்லத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே இவ்வறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறுகையில்,
நானும் பலதடவை தடுப்புக்காவிலில் இருந்தபோது மனதளவில் பாதிக்கப்பட்டு சாகலாம் என்ற நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றேன். எனது மனவியும் மனித உரிமை ஆணைக்குழு போன்ற தொண்டு நிறுவனங்கள் ஆறுதல் சொல்லிருந்தனர்.
இதே போன்றதொரு சம்பவம் இனிவரும் காலங்களில் எனக்கு மட்டுமல்ல
எந்தவொரு குடிமகனுக்கும் ஏற்படக்கூடாது. அப்படி நிகழ்ந்தால் அவர்களது குடும்பம் பாரதூரமான பின்னடைவுகளைச் சந்திக்கும்.
முன்னால் போராளிகளான எங்களை அரசாங்கம் புனர்வாழ்வளித்து
சுதந்திரமானமுறையில் வாழத்தான் விட்டிருந்தது. அரசு சில கடன்களையும்
தந்து உதவிசெய்திருந்தது. அந்த நிலையில் ஓரளவுக்கு எனது பொருளாதார
நிலையில் சிறப்பாக இருந்தேன். ஆனால் இப்பொழுது பூச்சியமான நிலையில் கீழ் மட்டத்திலிருக்கின்றேன்.
இந்தமாதிரியான மிலேச்சத்தனமான தாக்குதல்களை என்றைக்குமே விடுதலைப்புலி போராளிகள் செய்யமாட்டார்கள். 2009 க்குப்பின்னர் எந்த கெட்ட வழிகளிலும் அவர்கள் செல்லவில்லை.
இந்தக் கொடிய யுத்தம் எல்லோரையும் ஏதோ ஒரு வழியில்
தாக்கத்துக்குள்ளாகியிருக்கின்றது. ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கின்ற எமது
போராளிகளை மீண்டும் மீண்டும் துன்புறுத்தாதீர்கள். அரசுதான் எங்களை
வழிநடத்துகிறார்கள். அவர்களின் கட்டளையை மீறி நாங்கள் எதுவும்
செய்யவில்லை.
கிழக்கு மாகாணத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வைக்கூட
அரசின் அனுமதியுடன் அவர்களின் அனுமதி பெற்றே செய்தோம். நாங்கள்
அரசின் கண் பார்வைக்குள்தான் இருக்கின்றோம்.
ஆனால் இப்படியான கொடிய பயங்கரவாதச் தடைச்சட்டத்தில் கைது செய்து இப்படியான பயங்கரமான நிலை எந்த முன்னாள் போராளிகளுக்கோ அப்பாவி மக்களுக்கோ ஏற்படுத்தக்கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன்- என்றார்.
0 comments:
Post a Comment