எம்.பி சி.சிறிதரன் வீட்டிலும் தேடுதல் நடவடிக்கை

என்னை அச்சுறுத்தும் வகையிலையே இராணுவத்தினர் எனது வீட்டில் சோதனையை மேற்கொண்டனர். இந்த சோதனை தொடர்பில்  சபாநாகர் மற்றும் சர்வதேச நாடாளுமன்ற அமைப்பிடமும் முறையிடவுள்ளேன். இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வீட்டில் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர். அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது,

யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள எனது இல்லத்திற்கு நேற்று பெருமளவிலான இராணுவத்தினர் வருகை தந்திருக்கின்றனர். இதன்போது, நான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சலிக்காக சென்றிருந்த நிலையில்
என்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளே வீட்டில் இருந்துள்ளனர்.

ஆனாலும் எனது வீட்டை இராணுவத்தினர் சோதனையிடப் போவதாகக் கூறிய போது நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுடைய வீடு இது என்றும் அவர் தற்போது இல்லை என்றும் என்னுடைய மனைவி இராணுவத்தினருக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றார்.

ஆனாலும் அவர்கள் இதனைக் கருத்தில் கொள்ளமால் ஏற்கனவே திட்டமிட்டு வந்தவர்கள் போன்று வீட்டின் பல இடங்களிலும் நீண்டதொரு தேடுதலை நடத்தியுள்ளனர். 

அதிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் சம்மந்தப்பட்ட ஆவணங்கள் ஏதும் இருக்கிறதா என்ற அடிப்படையிலையே நீண்டநேரம் கடும் சோதனைகளையும், தேடுதல்களையும் மேற்கொண்டனர்.

அதிலும் என்னுடைய மூத்த மகனின் அறையில் அவரது புத்தகங்கள் கொப்பிகள் உள்ளிட்ட பலவற்றையும் துருவித் துருவி  தேடியிருக்கின்றனர். இவ்வாறு என்னுடைய வீட்டில் நீண்ட நேரத் தேடுதல்களை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து சென்றுள்ளனர். 

இராணுவத்தினரின் இத்தகைய செயற்பாடுகள் எனக்கும் என்னைச் சார்ந்திருக்கின்றவர்களுக்கும் என்னுடன் உள்ளவர்களுக்கும் அச்சுறுத்தல் விடுப்பதாகவே நான் பார்க்கின்றேன்.

இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருக்கின்ற எனக்கு ஒரு முன் அறிவித்தல் ஏதும் இல்லாமல் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. ஆனாலும் திடிரென வந்த சோதனைச் செய்கையானது, அச்சுறுத்தும் செயற்பாடாகவே அமைந்துள்ளது. 

ஆகையினால் இது தொடர்பில் சபாநாயகர் மற்றும் சர்வதேச நாடாளுமன்ற
அமைப்பிடமும் நான் முறையிட இருக்கின்றேன். இதே வேளை கடந்த காலங்களில் பல தடவைகள் இராணுவத்தின் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் நான் ஆளாகியிருக்கின்றேன். அத்தோடு நான்காம் மாடியிலும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றேன். 

ஆனாலும் அண்மைய காலங்களில் இது குறைந்த நிலையிலும் இப்போது தென்பகுதியில் ஏற்பட்ட சம்பவங்கைளயடுத்து எங்களை மீண்டும் அச்சுறுத்துவது ஆரோக்கியமானதாகத் தென்படவில்லை.

இவ்வாறு என்னையும் என்னைச் சுற்றியுள்ளவர்களையும் அச்சுறுத்தும் செயற்பாடுகளை படையினர் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். 

அதே போன்று மக்களை அச்சுறுத்தும் வகையில் படையினர் மேற்கொள்ளுகின்ற இத்தகைய செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றேன்-என்றார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment