அவசரகால சட்ட விவாதத்தின் போது விடயத்துக்கு பொறுப்பான எவரும் இல்லை

அவசரகால சட்ட விவாதத்தின் போது விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர்களோ, பாதுகாப்பு அதிகாரிகளோ, முப்படை மற்றும் பொலிஸ் பிரதிநிதிகளோ இல்லையென சபையில் ஆளும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சபை முதல்வரும் தனது எதிர்ப்பை இதில் தெரிவிப்பதாக கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அவசரகால சட்டத்தை நீட்டிக்கும் விவாதம் இடம்பெற்றது, விவாதத்தில் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உரையாற்றிய போதும் பாதுகாப்பு அமைச்சரோ, இராஜாங்க அமைச்சரோ, பாதுகாப்பு செயலாளர், அதிகாரிகள் முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் என எவரும் இல்லாது சபை வெறுமையாக இருந்தது. இதன்போது உறுப்பினர்கள் முறைப்பாடு செய்தனர். இந்நிலையில் சபையை வழிநடத்திய பிமல் ரத்நாயக எம்.பி உடனடியாக இதனை சபாநாயகருக்கு அறியப்படுதினார்,
பின்னர் விவாதம் தொடர்ந்த நிலையில் இடையில் சபையில் இருந்து கருத்தை முன்வைக்க எழும்பிய சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல, அவசரகால சட்டம் குறித்த விவாதம் நடக்கும் போது சம்ரதாயப்படி முப்படை அதிகாரிகள், பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாப்பு செயலாளர் இருக்க வேண்டும். அவர்கள்தான் கேள்விகளுக்கான பதில்களை வழங்க வேண்டும். கடந்த முறை வரவும் இல்லை, இன்றும் வரவில்லை. ஏன் இவ்வாறு செய்கின்றனர் என அதிகாரிகளிடம் வினவினேன். இவர்கள் கண்டிப்பாக சபையில் இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் என்ன செய்கின்றனர் என தெரியவில்லை என்றார்.
இதன்போது சபாபீற்றதில் தலைமை தாங்கிய பிமல் ரதனாயக எம்.பி:- இதற்கு முன்னரும் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது சபாநாயகருக்கு தெரியப்படுத்தினேன். நானும் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான விவாதங்களில் கலந்துகொண்டுள்ளேன். அமைச்சர்கள், அதிகாரிகள் அப்போதெல்லாம் இருந்தார்கள். இம்முறை மிகவும் மோசமாக உள்ளது, ஆகவே சபாநாயகர் மற்றும் செயலாளர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதன்போது மீண்டும் பதில் கூறிய சபை முதல்வர் :- எனக்கு நினைவுள்ளது , 1980 களில் இந்திய இராணுவம் இருந்த காலத்திலும், அதேபோல் ஜே.வி.பி புரட்சிக் காலத்திலும் கூட இவ்வாறான அவசரகால சட்டம் கொண்டுவரப்பட்ட காலத்தில் அமைச்சர் அல்லது பிரதியமைச்சர் தான் இந்த விவாதங்களை ஆரம்பித்து வைப்பார்கள். இன்று மிகவும் மோசமாக உள்ளது. கேள்விகளுக்கு பதில் தெரிவிக்க எவரும் இல்லை. இது மிகவும் மோசமான நிலைமை என்றார்.
சபாபீடத்தில் தலைமை தாங்கிய பிமல் ரத்நாயக :- நான் மீண்டும் சபாநாயகருக்கு இது குறித்து தெரியப்படுத்துகின்றேன்.
ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய சி.பி. ரத்நாயக எம்.பி :- இது மிகவும் மோசமானது, பாதுகாப்பு படைகள் இல்லாது, பாதுகாப்பு செயலாளர் இல்லாது அதிகாரிகள் இல்லாது நாம் வீணாக இங்கு பேசிக்கொண்டுள்ளோம் என்ற உணர்வே உள்ளது. சபாநாயகர் முதலில் இதனை தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு கீழ்த்தரமாக செயற்பட இடமளிக்கக்கூடாது என்றார். இதன்பின்னர் உரையாற்றிய பிரதிநிதிகளும் குறித்த காரணம் குறித்து கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கத்துயும் பாதுகாப்பு அமைச்சையும் விமர்சித்தே உரையாற்றினர்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment