ஐஎஸ் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு

ஐஎஸ் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் ஒன்றை  படையினர் நேற்று கண்டுபிடித்து முற்றுகையிட்டனர்.

மட்டக்களப்பு- காத்தான்குடி எல்லையில் உள்ள ஒல்லிக்குளத்தில் இந்த முகாம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நகரப் பகுதிக்கும், காட்டுப் பகுதிக்கும் நடுவே 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த இந்த முகாம் குறிப்பிடத்தக்களவு காலம் இயங்கியதற்கான தடயங்கள் தென்படுவதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தவ்ஹீத் ஜமாத் இஸ்லாம் அமைப்பினால் பயன்படுத்தப்பட்டது எனக் கருதப்படும் இந்த பயிற்சி முகாமில், ஜிகாதிகளுக்கான பயிற்சி வசதிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமே இந்தப் பயிற்சி முகாமை உருவாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அவரது சகோதரரும், சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் உயிரிழந்தவருமான ரில்வான் காசிம் பயிற்சி முகாமுக்கு பொறுப்பாக செயற்பட்டுள்ளார்.

இந்தப் பயிற்சி முகாமில் 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட வெடி விபத்து ஒன்றிலேயே ரில்வான் காசிம் தனது ஒரு கண்ணையும், இரண்டு கைவிரல்களையும் இழந்துள்ளார்.

பயிற்சி முகாமிலிருந்தே குண்டுத் தாக்குதல்களுக்குத் தேவையான வெடிபொருள்கள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாகப் படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குண்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட எஸ்-லோன் குழாய்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட 6 அடி நீள குழாயில் தயாரிக்கப்பட்ட குண்டும் இங்கேயே தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

 முகாமுக்குள் எவரும் இலகுவில் நுழைய முடியாத படியும், நுழைபவர்களை இலகுவாக அடையாளம் காணும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுடன், இரகசியமாக வெளியேறுவதற்கான வழிகளும் உள்ளமை தெரிய வந்துள்ளது.

விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment