குழப்பத்தை ஏற்படுத்துவோருக்கு பத்தாண்டு சிறை

நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றம் உறுதிசெய்யப்படின் பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து நேற்று   ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், ”உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை தொடர்ந்து நாட்டில் இடம்பெற்றுவரும் சம்பவங்களானது இன அல்லது மதக் குழுவினருக்கு இடையிலான மோதலில்லை. இது குறுகிய மனப்பாங்கு கொண்ட சில சந்தர்ப்பவாதிகளினால் ஏற்பட்ட பிரச்சினை என்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
குருநாகல், வாரியபொல, குளியாபிட்டிய, சிலாபம் மற்றும் மினுவங்கொட ஆகிய பிரதேசங்களிலேயே பிரச்சினைகள் தோற்றம் பெற்றிருந்தன. எனினும், இதனால் பாதுகாப்பு நிமித்தம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டியதாயிற்று.
இவ்வாறான செயற்பாடுகளை தடுக்க முழுமையான பொலிஸ் பலத்தை பாவித்து நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு இக்குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவோருக்கு உயர் நீதிமன்றத்தின் ஊடாக மாத்திரமே பிணை வழங்கப்படும். அதுமாத்திரமின்றி அவர்கள் மீதான குற்றம் உறுதிசெய்யப்படின் பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டோர் எதிர்காலத்தில் தொழில்வாய்ப்புக்கு அல்லது வெளிநாடு செல்வதற்காக பொலிஸ் அறிக்கையை கோரும் பட்சத்தில் இது தொடர்பாக நிச்சயமாக குறிப்பிடப்படும்.
இதேவேளை, சமூக ஊடகங்கள் ஊடாக குழப்பத்தை ஏற்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment