மடு, நல்லூர், வற்றாப்பளை கோவில்களிலும் பாதுகாப்பைப் பலப்படுத்தக் கோரிக்கை

பயங்கரவாதத் தாக்குதல் கிறிஸ்தவ தேவாலயங்களை தாக்கியதால் இப்போது பாதுகாப்பு முழுவதும் தேவாலயங்களை நோக்கியே உள்ளது. இதனால் பயங்கரவாதிகளின் அடுத்த இலக்கு மடு, நல்லூர் கந்தசாமி கோவில், வற்றாப்பளை அம்மன் கோவில்  ஆகியவையாகக்கூட  இருக்கலாம்.  ஆகவே மக்கள் அதிகமாக வாழும் இந்த பகுதிகளில் பாதுகாப்பை அரசு பலப்படுத்த வேண்டும். இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில் நேற்று  நடைபெற்ற நாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் தெரிவித்ததாவது,

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொல்லப்பட்ட எமது மக்களுக்கான அஞ்சலியை நான் இந்த சபையில் செலுத்துவதுடன், இந்த மனிதாமிபானமற்ற செயற்பாட்டைச் செய்தவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றேன். எனது எதிர்ப்பைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.   

இந்த தாக்குதலில்  நாட்டின் பொருளாதாரத்தை வீழ்த்துவது மற்றும் மக்கள் செறிவாக வாழக்கூடிய இடங்களில் தாக்குதலை நடத்துவது என்ற இரண்டு நோக்கங்கள்  இருந்துள்ளன. இது மிகவும் மூர்க்கத் தனமானதும் முஸ்லிம் சமூகத்தை எமது சமூகத்தில் இருந்து பிரித்துப்பார்க்கின்ற செயலுமாக   இடம்பெற்றுள்ளது. இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். 

இந்த பயங்கரவாதம் என்பது வேறு, விடுதலைப்புலிகளின் பயங்கரவாதம் என்பது வேறு என்பதை எதிர்க்கட்சி தலைவர் சபையில் சுட்டிக்காட்டினார். எமது போராட்டம் வேறு இந்த தீவிரவாதம் வேறு என்பதை அவர் உணர்ந்துள்ளார் என்பது மகிழ்ச்சியாகும். இவ்வாறான மோசமான பயங்கரவாத செயற்பாடுகளை நாம் ஏற்கவில்லை. 

இந்த பயங்கரவதத்தை நாம் அனைவரும் இணைந்து தடுக்க வேண்டும். எமது சமூகத்தை அமைதியாக வைத்துள்ளதற்காக நான் எமது கிறிஸ்தவ மத தலைவர்களுக்கு நன்றிகளை தெரிவிக்கின்றேன். இந்த தாக்குதல் கிறிஸ்தவ தேவாலயங்களை தாக்கியதால் இப்போது பாதுகாப்பு முழுக்க தேவாலயங்களை நோக்கியே உள்ளது. 

ஆனால் ஏனைய மக்கள் செறிந்து வழிபாடும் வணக்கஸ்தலங்கள் மீதும் அச்சுறுத்தல் உள்ளது. இந்த தீவிரவாதிகள் தமது தாக்குதலை மாற்றிகூட செய்யலாம். உதாரணமாக மடு, நல்லூர் கந்தசாமி கோவில், வற்றாப்பளை அம்மன் கோவில் ஆகியவற்றைக்கூட இலக்கு வைக்கலாம். ஆகவே மக்கள் அதிகமாக வாழும் இந்த பகுதிகளில் பாது­காப்பை அரசு பலப்படுத்த வேண்டும். 

மேல்நோக்கி பறக்கும் கமராக்களின் செயற்பாடுகள் குறித்தும் பேசப்படுகின்றது. வணக்கஸ்தலங்கள் மீதும் இவை பறக்கவிடப்படுகின்றன. ஆகவே இது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பயங்கரவாத  செயற்பாடுகளை அரசியல் மயமாக்காது நியாயமாக இது குறித்து செயற்பட வேண்டும். அத்துடன் அரசியல் கைதிகளை விடுவிக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை விரைவுபடுத்த வேண்டும்-என்றார்.


#tamilnewsking
Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment