அரசின் சாதனைகளுக்காக இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றிபெற செய்யுங்கள்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அனைத்துத் துறைகளின் மூலம் மக்கள் நலத் திட்டங்களை கழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி சாதனை புரிந்து வருகிறது.
காவேரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதார உரிமைகளை நிலைநாட்டும் வகையில் அம்மா வழியில் செயல்படும் இவ்வரசு மேற் கொண்ட தொடர் முயற்சிகளினால் காவேரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தொடக்கநிலை, இடைநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை ஆகிய வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் உயர்வு பெற்றுள்ளது. 70.59 லட்சம் ஏழை எளிய பள்ளி மாணவ, மாணவியருக்கு ரூ. 1,223.35 கோடி செலவில் விலையில்லா நான்கு இணை சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் புத்தகப் பைகள் வழங்கப்பட்டுள்ளன.
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், மருத்துவ உதவித் தொகை ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ. 91 கோடி செலவில் புற நோயாளிகள் பிரிவு மற்றும் ரூ. 16.11 கோடி செலவில் குழந்தைகள் கேத் லேப் கருவி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ரூ. 229.46 கோடி மதிப்பில் புதுக்கோட்டையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை துவக்கப்பட்டுள்ளது. டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 13.75 லட்சம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தலா ரூ. 18,000 வீதம் ரூ. 1,113.52 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
ஊரகப் பகுதிகளில் வாழும் ஏழை எளிய மக்களின் வறுமையை ஒழிப்பதற்கும், அனைத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் அம்மாவின் அரசு பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றது.
கிராமப்புற பொருளாதாரத்தில் கால்நடைகள் முக்கிய பங்கு வகிப்பதுடன், அதிக எண்ணிக்கையிலான சிறிய, நடுத்தர விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு பயனுள்ள வேலை வாய்ப்பை வழங்கி பொருளாதார நிலையை மேம்படுத்துகிறது. இதன் காரணமாக, ரூ. 62.43 கோடி செலவில் 15,661 நபர்களுக்கு விலையில்லா கறவைப் பசுக்களும், ரூ. 315.03 கோடி செலவில் 2,45,199 நபர்களுக்கு விலையில்லா ஆடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
அம்மா மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ரூ. 50.8 கோடி செலவில் நினைவு மண்டபம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாண்புமிகு அம்மா அவர்கள் வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தை அரசு நினைவில்லமாக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் ரூ. 20 கோடியில் நடைபெற்று வருகின்றன. ரூ. 2.52 கோடி செலவில் சென்னை காமராசர் சாலையில்
பாரத் ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்பட்டுள்ளது. நாராயணசாமி நாயுடு அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் கோயம்புத்தூர் மாவட்டம், வையம்பாளையத்தில் ரூ. 1.50 கோடி செலவில் நினைவு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம், கடலூர் மாவட்டம், மஞ்சகுப்பத்தில் இராமசாமி படையாட்சியார் நினைவு மண்டபம், தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பாரத மாதா நினைவாலயம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இசை மேதை நல்லப்ப சுவாமி அவர்களின் நினைவாக நினைவுத் தூண் ஆகியவை அறிவிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
போக்குவரத்து, பொதுமக்களின் வாழ்வில் முக்கிய பங்காற்றுகிறது. தமிழ் நாடு வலுவான பேருந்து போக்குவரத்து அமைப்பைப் கொண்டுள்ளது. அவற்றில், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. இவ்வரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மாநிலத்திலுள்ள அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு சேவை வழங்குவதுடன் அவற்றை தொலைதூர வழித்தடங்களுடன் இணைக்கவும் செய்கின்றன. மேலும், அண்டை மாநிலங்களுக்கும் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 1,955 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமிய பெருமக்கள் ஹஜ் புனிதப் பயணம் செல்ல ஆண்டுதோறும் ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்த ஆண்டு 3,764 ஹஜ் புனித பயணிகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. ஹஜ் குழுவிற்கு வழங்கப்படும் நிர்வாக மானியம் ரூ. 50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
600 கிறித்துவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற் கொள்ள ரூ. 1.20 கோடி வழங்கப்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினருக்கு நேரடி நியமன முறையில் நிரம்பாத பணியிடங்களுக்கு முன்கொணர்வு முறை நீட்டிக்க ஆணையிடப்பட்டுள்ளது.
மக்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்த அம்மாவின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், அம்மா வழியில் நடைபெறும் கழக அரசு தொடர்ந்து வெற்றி நடைபோடவும், அனைத்து மக்கள் நலத் திட்டங்கள் தங்கு தடையின்றி கிடைத்திடவும், வருகின்ற 19.5.2019 அன்று நடைபெற உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கு
எம்.ஜி.ஆரால் கண்டெடுக்கப்பட்ட, புரட்சித் தலைவியால் கட்டிக்காக்கப்பட்ட வெற்றிச் சின்னமாம் ‘‘இரட்டை இலை’’ சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுமாறு, வாக்காளப் பெருமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment