அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.6000 திட்டம் அமலுக்கு வந்தது

அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு நேற்று முறைப்படி வெளியிட்டது. மக்களவை தேர்தலுக்கு முன் பிரதமரின் கிசான் திட்டம் அறிவிக்கப்பட்டது. 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் 12.5 கோடி பேருக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் 3 தவணையாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தில் இதுவரை 3.66 கோடி பயனாளிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 3.03 கோடி பேருக்கு முதல் தவணை ரூ.2,000 வழங்கப்பட்டு விட்டது. 2 கோடி பேர் 2வது தவணையையும் பெற்றுவிட்டனர். இந்நிலையில், பிரதமரின் கிசான் திட்டம், நில அளவை கருத்தில் கொள்ளாமல், அனைத்து விவசாயிகளுக்கும் (14.5 கோடி) விரிவுபடுத்தப்படும் என பாஜ தேர்தல் அறிக்கையில் கூறப்பபட்டது.
கடந்த மாதம் 31ம் தேதி நடத்தப்பட்ட முதல் அமைச்சரவை கூட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இதற்கான அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய வேளாண்துறை அமைச்கம் நேற்று கடிதம் எழுதியுள்ளது. நிறுவன நிலங்களை வைத்திருப்பவர்கள், அரசியல் சாசன பதவிகளில் உள்ள விவசாய குடும்பத்தினர், மத்திய மாநில அரசு, பொதுத்துறை, அரசு தன்னாட்சி அமைப்பின் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள், டாக்டர்கள், இன்ஜினியர்கள், வக்கீல்கள், ரூ.10 ஆயிரத்துக்கு அதிகமாக ஓய்வூதியம் பெறுபவர்கள், கடந்த நிதியாண்டில் வருமானவரி கட்டியவர்கள் ஆகியோர் பிரதமரின் கிசான் திட்ட வரம்புக்குள் வர முடியாது. கிசான் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதால், மேலும் 2 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைவர்.
இதன் மூலம், இந்த நிதியாண்டில் இந்த திட்டத்துக்கான செலவு ரூ.87,217.50 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பயனாளிகளை அடையாளம் கண்டு, அவற்றின் புள்ளி விவரங்களை பிரதமரின் கிசான் வெப்சைட்டில் இணைக்கும் முழுப் பொறுப்பும் மாநில அரசை சார்ந்தது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, தகுதியான பயனாளிகளின் 100 சதவீத பட்டியலை தயாரிக்கும் பணியை விரைவாக மேற்கொள்ளும்படி மாநில அரசுகள் யூனியன் பிரதேச அரசுகளிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment