ஐ.எஸ். அமைப்பை ஒழிக்க புதிய சட்டம்-ரணில்

ஐ.எஸ். பயங்கரவாதத்தை இலங்கையிலிருந்து முற்றாக அழிக்கும் வகையிலான புதிய சட்டக்கட்டமைப்பொன்றை ஸ்தாபிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மேலும். இந்தப் பொறுப்பிலிருந்து அரசாங்கம் என்ற ரீதியில் எவரும் வெளியேறிச் செல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சஹரான் குழுவினர் இன்று இலங்கையில் அடக்கப்பட்டுள்ளார்கள். சஹரான் எனும் நபர் உருவான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பும் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்த நோயை நாம் கட்டுப்படுத்தினாலும் வைரஸை முழுமையாக அழிக்கவில்லை. புதிய வைரஸ் ஒன்று எதிர்காலத்தில் வரக்கூடும்.
இன்று இணைய வசதிகள் அதிகமாக உள்ளமையால் ஐ.எஸ். அமைப்பின் கொள்கைகளை இன்னொரு தரப்பினர் நிறைவேற்றக்கூடிய நிலைமையும் காணப்படுகிறது. இதனை நாம் நாட்டிலிருந்து முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும்.
ஐ.எஸ். அமைப்பை இலங்கையில் முழுமையாக கட்டுப்படுத்த புதிய பயங்கரவாதத் தடைச்சட்டமொன்று அவசியமாகியுள்ளது.
இதன் பொறுப்பு அமைச்சரவையின் உறுப்பினர்கள் என்ற ரீதியில் எமக்கு உள்ளது. இதிலிருந்து நாம் விலகிச் செல்ல முடியாது.
ஐ.எஸ். அமைப்பில் மக்கள் இணைவதை தடுப்பதும் பயங்கரவாதிகளின் தாக்குதல்களை முறையடிப்பதும் தாக்குதலொன்று இடம்பெற்றால் அதற்கு முகம் கொடுக்கும் வகையிலான அடுத்தக்கட்ட செயற்பாடுகளை மேற்கொள்வதும் என எமக்கு மூன்று இலக்குகள் உள்ளன.
இந்த மூன்று விடயங்களையும் பிரதானமாகக் கொண்டே, நாம் தற்போது பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம்.
அந்தவகையில், அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்துக்கு துணைப்போகும் மற்றும் அதற்கு உதவிகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக நாம் கடும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.
இணையப் பயன்பாட்டை அவதானிக்க சட்டக் கட்டமைப்பொன்றையும் நாம் கொண்டுவரவுள்ளோம். இவை மட்டுமல்லாது, ஐ.எஸ். பயங்கரவாதச் செயற்பாடு தொடர்பிலான தகவல் பரிமாற்றலை விரிவுப்படுத்தும் ஒரு கட்டமைப்பையும் ஸ்தாபிக்க வேண்டியத் தேவையுள்ளது.
இதற்கு சர்வதேச புலனாய்வுப் பிரிவினருடனும் இணைந்துகொள்ள வேண்டியத் தேவையுள்ளது. இதனை எம்மால் தனியாக செய்ய முடியாது” என மேலும் தெரிவித்துள்ளார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment