பதவிகளை ஏற்பதாக கூற வரவில்லை, நிலைமையை விளக்கவே வந்தோம்

அமைச்சுப் பதவிகளைத் துறந்த அமைச்சர்களும் ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். பௌசி தலைமையில் மகாநாயக்கர்களை நேற்று கண்டியில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்குக் கடந்த வாரம் பௌத்த பீடங்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், கண்டி அஸ்கிரிய பீடத்தில் மகாநாயக்கர்களுக்கு அவர்கள் தமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தினர்.
இந்தச் சந்திப்பின்போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒருமித்து பௌத்த மகா சங்கத்தின் கோரிக்கைகளை ஒருபோதும் புறக்கணிக்கவில்லை எனவும், ஆனால் முஸ்லிம் சமூகத்துக்கு நீதி கிட்டும்வரை அமைச்சுப் பதவிகளை மீள் ஏற்பதற்கு தயாராக இல்லை எனவும் வலியுறுத்திக் கூறியுள்ளது.
நாம் ஏன் இந்த முடிவுக்கு வந்தோம் என்பதை மதிப்புக்குரிய உங்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இன்று இங்கு வந்தோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த மூன்றாம் திகதி நாட்டில் ஏற்படவிருந்த பேரனர்த்தத்தை தவிர்க்கும் பொருட்டே இந்தத் தீர்மானத்தை எடுக்கவேண்டி வந்தது. அன்று காலையில் நாம் அவசரமாக எமது மூத்த அரசியல் தலைவர் பௌசி அவர்களின் இல்லத்தில் கூடி நிலைமைகளை விரிவாக ஆராய்ந்தோம்.
சமூகத்தின் நலன், பாதுகாப்பை கருத்தில்கொண்டு செயற்பட வேண்டியதன் அவசியத்தை அங்கு பலரும் வலியுறுத்தினர். இறுதியில் நாம் எடுத்த முடிவு அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் ஒன்றாக பதவிகளை இராஜினாமாச் செய்வதாகும். இதற்கான உரிய ஆலோசனைகளை நாம் உலமா சபையிடமிருந்து பெற்றுக் கொண்டோம்.
இதனடிப்படையில் அன்று மாலை மூன்று மணிக்கு அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இராஜினாமாச் செய்யும் முடிவை தெரியப்படுத்தினோம். ஆனால் பிரதமர் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தார். எனினும் எமது சமூகமும், நாடும் எதிர்கொள்ளப்போகும் அபாயகரமான சூழ்நிலையை அவருக்கு எடுத்துரைத்தோம். இராஜினாமாக் கடிதங்களை கையளித்துவிட்டு வந்தோம். இதன் காரணமாக அன்று நாட்டில் ஏற்படவிருந்த பேரழிவு தடுத்து நிறுத்தப்பட்டது.
முஸ்லிம் அமைச்சர்கள் பதவி துறக்க எடுத்த முடிவு தௌஹீத் தேசிய அமைப்பை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்டதல்ல. ரிஷாத் பதியுதீன் குற்றமிழைத்திருந்தால் அதனை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கலாம். அதனை நாம் நிராகரிக்கவோ, மறுக்கவோ மாட்டோம். ஆனால் அரசியல் ரீதியிலும், சில ஊடகங்களும், அவர் தொடர்பில் மிக மோசமாகவே நடந்துகொண்டன. பெரும்பான்மையின மக்களும் தவறாக வழிநடத்தப்பட்டனர்.
எமது பதவி துறப்பின் முக்கிய நோக்கம் முஸ்லிம் சமுகம் பாதுகாக்கப்படவேண்டும். நாடும் பாதுகாக்கப்பட வேண்டுமென்பது தான். முஸ்லிம்கள் ஒருபோதும் பயங்கரவாதத்தை ஆதரிக்கப்போவதில்லை. 30 வருட யுத்தத்தின் போதும் நாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை. சஹ்ரான் போன்ற பயங்கரவாதிகளின் செயலையும் நாம் ஆதரிக்கவில்லை. இந்த விடயத்தில் சஹ்ரான் குழுவின் பயங்கரவாத நடவடிக்கையை பாதுகாப்புத் தரப்புக்கு காட்டிக்கொடுத்ததே முஸ்லிம்கள்தான் என்பதை மறந்து விடக்கூடாது.
ஆனால் ஏப்ரல் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள். தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு முஸ்லிம்கள் மீது அடாவடித்தனங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இவ்வாறானதொரு நிலையில்தான் எமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமாச் செய்ய முடிவெடுத்தோம்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் 25 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை பதவி கவிழ்ப்பதற்காக ரிஷாத் பதியுதீனை தம்பக்கம் இழுக்க மஹிந்த தரப்பினர் எடுத்த முயற்சி பலிக்காததன் காரணமாகவே அவர் மீது அடுத்தடுத்து குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. அதற்கு பெரும்பான்மை ஊடகங்களும் காரணமாக பயன்படுத்தப்பட்டன. ரிஷாத் மீது தவறு இருந்தால் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதை நாம் தடுக்க முற்படமாட்டோம். ஆனால் கண்டவர்கள் எல்லாம் சட்டத்தைக் கையிலெடுக்க அனுமதிக்க முடியாது.
நாட்டின் நிரந்தர சமாதானம் ஏற்படவேண்டுமென்பதற்காகவே இவ்வாறானதொரு முடிவை நாம் எடுத்தோம். இது நிரந்தரமான முடிவு அல்ல தற்காலிகமானது தான். நாம் எடுத்த இந்த முடிவின் படி எமது சமூகத்துக்கு நீதி, நியாயம் கிட்டும் வரை இந்த நிலைப்பாட்டிலிருந்து விடுபட முடியாது. உங்கள் கோரிக்கையை தலையில் சுமந்து மதிக்கின்றோம். ஆனால் எமது முடிவை இப்போதைக்கு மாற்றிக்கொள்ள முடியாது நிச்சயமாக நியாயம் கிட்டுமானால் அமைச்சுப் பதவிகளை மீண்டும் ஏற்பது குறித்து பரிசிலிப்போம்.
மிகவும் சுமுகமாக இடம்பெற்ற இந்தச் சந்திப்பு சுமார் இரண்டு மணிநேரம் நடந்தது. எதிர்காலத்தில் நிலைமை சீராக்கப்பட வேண்டுமென மகா சங்கத்தினர்களும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கைகொள்வதாக இங்கு இரு தரப்பினராலும் தெரிவிக்கப்பட்டது.
நேற்றுக்காலையில் கண்டிக்கு வருகை தந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதலில் கண்டி லைன் பள்ளிவாசலில் ளுஹர் தொழுகையில் கலந்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் பௌசி தலைமையில் கூடி ஆலோசனைக் கூட்டத்தினை நடத்தியுள்ளனர். பின்னர் பிற்பகல் இரண்டு மணியளவில் அஸ்கிரிய பீடத்துக்குச் சென்று பௌத்த மகா சங்கத்தின் உயர் பீடங்களான அஸ்கிரிய, மல்வத்தை, சியம் நிக்காயக்களின்  மகா சங்கத்தினர்களைச் சந்தித்து தமது முடிவு குறித்து தெளிவுபடுத்தினர்.
பாராளுமன்ற உறுப்பினர் பௌசியுடன் ரவூப் ஹக்கீம், எம். எச். ஏ. ஹலீம், ரிஷாத் பதியுதீன் , எம். எஸ். எஸ். அமீரலி, பைசல் காசிம், எச். எம். எம். ஹரீஸ், பைஸர் முஸ்தபா, அப்துல்லா மஹ்ரூப், அலிசாஹிர் மௌலானா, இம்ரான் மஹ்ரூப், எம். ஐ. எம். மன்சூர், இஷாக் ரஹ்மான், ஏ. எல். எம். நஸீர், எம். எஸ். தௌபீக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம், எஸ். எம். மரிக்கார் ஆகியோர் வெளிநாடு சென்றிருப்பதாலும், காதர் மஸ்தான், முஹிபுர் ரஹ்மான் ஆகியோர் தமது தொகுதிகளில் மிக முக்கியமான வேலை காரணமாகவும் கலந்துகொள்ள முடியாதென தெரியப்படுத்தி எட்டப்படக்கூடிய முடிவுகளுக்கு ஒத்துழைப்பதாக அறிவித்திருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக ரவூப் ஹக்கீம் விடயங்களை விரிவாக தெளிவுபடுத்தினார். அவர் அளித்த விளக்கத்தில் முதலில் பௌத்த மகா சங்கத்தினர் விடுத்த கோரிக்கைக்கு மதிப்பளிப்பதாகவும், மரியாதையுடன் நோக்குவதாகவும் தெரிவித்தார்.
ஆனால் நாம் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்பதாகக் கூற வரவில்லை. பதிலாக இவ்வாறானதொரு முடிவுக்கு நாம் ஏன் தள்ளப்பட்டோம் என்பதை தெளிவுபடுத்தவே வருகை தந்தோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.   
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment