பாலகோட் தாக்குதலுக்கு வியூகத்தை வகுத்த சமந்த் கோயல் ‘ரோ’ உளவுப்பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அமைச்சரவை நியமனக் குழுவின் தலைவரான பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) இந்திய உளவு அமைப்புகளுக்கான புதிய தலைவர்களை நியமித்துள்ளார்.
அந்தவகையில், வெளிநாடுகளுக்கான உளவு அமைப்பான ‘ரோ’வின் புதிய தலைவராக சமந்த் கோயலை பிரதமர் மோடி நியமித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் இந்திய துணை இராணுவப்படை வீரர்கள் 40இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக கடந்த பெப்ரவரியில் பாலகோட்டில் தீவிரவாதிகளின் முகாம் மீது இந்திய விமானப்படை வெற்றிகரமான தாக்குதலை நடத்தியது. இந்தியாவின் பெரும் வெற்றியாக பார்க்கப்படும் இந்த தாக்குதல் திட்டத்தை வகுத்தவர்களில் சமந்த் கோயல் முக்கியமானவர்.
சமந்த் கோயல் 1990களில் பயங்கரவாத தாக்குதல்கள் பஞ்சாப்பில் உச்சத்தில் இருந்த சமயத்தில், பாகிஸ்தானின் ஊடுருவலைத் தடுக்கவும், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தவும் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, உள்நாட்டு புலனாய்வு அமைப்பான ஐ.பி.யின் புதிய தலைவராக அரவிந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரவிந்த் குமார், காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் கைதேர்ந்தவராக திகழ்ந்தவர். அசாமில் பொலிஸ் அதிகாரியாக பணியை தொடங்கிய இவர், பின்னர் புலனாய்வுப் பிரிவில் இணைந்து மத்திய அரசுக்காக பணியாற்றி வந்துள்ளார்.
0 comments:
Post a Comment