பேருவளை இனவாத சம்பவத்தை நிறுத்தியது போல் இந்த அரசாங்கத்துக்கு முடியவில்லை- பசில்

ஒரு தேசத்துக்கான ஒரே இனமாக நின்று செயற்பட வேண்டுமாக இருந்தால், யாரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொதுச் சட்டம் நாட்டுக்கு அவசியம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நேற்று (26)  முஸ்லிம் உலமா கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஒரு பிரதேசத்துக்கோ, இனத்துக்கோ, மதத்துக்கோ வரையறுக்கப்பட்ட ஒரு கட்சி அல்ல. தமது கட்சி ஆரம்பித்து ஒரு வருட காலத்துக்குள் உள்ளுராட்சி சபைத் தேர்தலை வெற்றிகொள்ள முடிந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலத்தில் நாட்டின் நிருவாகத்தை முன்னெடுக்கவுள்ள கட்சி என்ற வகையில், நாட்டின் சமாதானமான ஒரு சூழலை நாம் எதிர்பார்க்கின்றோம். எல்.ரி.ரி.ஈ. அமைப்பிடமிருந்து நாட்டை பாதுகாத்ததனால் தான் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு விரைவான அபிவிருத்தியை நோக்கி நாட்டை கொண்டு செல்ல முடியுமானது. நாம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கும் காலத்தில், நாட்டில் இனவாத பிரச்சினை இருந்தால், நாம் எதிர்பார்க்கும் அபிவிருத்தியைக் கொண்டு செல்ல முடியாமல் போகும்.
எனவே, கடந்த ஏப்ரல் 21 போன்ற சம்பவங்கள் எமது நாட்டில் இடம்பெறுவதை காண்பதற்கு நாம் விரும்புவதில்லை. பேருவளை சம்பவத்தின் போது அதில் தலையிட்டு, முடிவுக்குக் கொண்டுவர எம்மால் முடிந்தது. சகல தகவல்கள் கிடைத்திருந்தும் கடந்த ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவத்தை தடுத்து நிறுத்த இந்த அரசாங்கத்துக்கு முடியாமல் போனது.
அரசாங்கம் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும். இந்த அரசாங்கம் அதற்கான பொறுப்பை எமது தலையில் போட பார்க்கின்றது. சட்டத்தை நிலைநாட்டும் நிறுவனம், இராணுவம் என்பன அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன.
முஸ்லிம் சமூகத்தில் சிலர் செய்த தவறை, முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் சுமத்தக் கூடாது. அதேபோன்று, பொதுஜன பெரமுனவிலும் சிலர் செய்யும் தவறுக்காக முழு கட்சியும் பொறுப்புச் சொல்லத் தேவையில்லையெனவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ மேலும் கூறியுள்ளார். 
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment