மகளிர் உலகக்கிண்ண கால்பந்து – இங்கிலாந்து, பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்

8 ஆவது மகளிர் உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியில் இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.
24 அணிகள் பங்கேற்றுள்ள 8 ஆவது மகளிர் உலகக் கிண்ணக் கால்பந்து போட்டி பிரான்ஸில் இடம்பெற்று வருகிறது.  இதில் நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து-கேமரூன் அணிகள் மோதின.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் கேமரூனை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது.
இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டீபானி ஹவுட்டன் 14 ஆவது நிமிடத்திலும், எலென் ஒயிட் 45 ஆவது நிமிடத்திலும், அலெக்ஸ் கிரீன்வுட் 58 ஆவது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ்-பிரேசில் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் விளையாடிய பிரான்ஸ் அணி, பிரேசில் அணிக்கு கடும் சவாலாக விளங்கியது.
பிரான்ஸ் அணி வீராங்கனை வாலெரி கெவின் 52 ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். பிரேசில் அணி வீராங்கனை தைசா டி மொரஸ் 63 ஆவது நிமிடத்தில் பதில் கோலை அடித்தார்.
வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலை வகித்தன. இதனால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.
கூடுதல் நேரத்தில் (107 ஆவது நிமிடம்) பிரான்ஸ் வீராங்கனை அமன்டின் ஹென்றி வெற்றிக்கான கோலை அடித்தார். முடிவில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை சாய்த்து காலிறுதிக்குள் நுழைந்தது.
மகளிர் உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் ஜூலை 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment