இரணைமடுக்குள புனரமைப்பில் மோசடி: விரைவில் சட்ட நடவடிக்கை -சுரேன்

இரணைமடுக்குள புனரமைப்பின்போது இடம்பெற்ற மோசடி குறித்து 2ஆம் கட்ட சட்ட அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் கடந்த வருடம் டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினை அடுத்து, இரணைமடுக் குளத்தின் புனரமைப்பின்போது மோசடி இடம்பெற்றதாக மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அதனையடுத்து, இது தொடர்பில் ஆராய்வதற்காக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், மூவரடங்கிய குழு ஒன்றினை கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி நியமித்தார்.
இந்நிலையில் விசரணைக்குழுவின் முதலாவது அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதன் பிரகாரம், இரணைமடுக் குள புனரமைப்பின்போது மோசடி இடம்பெற்றதாக உறுதிப்படுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
முதலாவது அறிக்கையின் பிரகாரம், மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு இரண்டாவது குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குழுவின் அறிக்கை இன்னும் ஒருவாரத்தில் கிடைக்கப்பெறும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர்  சுரேன் ராகவன் தெரிவித்தார்.
இரண்டாம் அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் குள புனரமைப்பின்போது இடம்பெற்ற தவறுகள் மற்றும் அதனை மேற்கொண்டவர்கள் குறித்தும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2,198 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இரணைமடுக் குளம் புனரமைக்கப்பட்டு விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment